Coimbatore Girl: கோவை சிறுமி கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு ட்ரீட்மென்ட்

  • கோவை: கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொது மக்கள் கண்டித்து வருகிறார்கள். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தும் காவல்துறையின் செயல்பாடு மாறவில்லை என்று புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் சிறுமியின் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி கை மற்றும் கால்களில் மாவு கட்டுடன் சிகிச்சை பெறும் போட்டோ வெளியாகியுள்ளது.

    கோவை மாவட்டம், சூலூர் அருகே பள்ளபாளையம் பகுதியில் கூலி தொழிலாளர் தம்பதி வசித்து வருகிறார்கள். அந்த தம்பதியின் 10 வயது மகள் கடந்த 22 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றபோது மாயமானார், அதிர்ச்சியடைந்த பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நேற்று முன்தினம் அந்த சிறுமியின் உடலில் காயங்களுடன் கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டது.

    கோவை சிறுமி வழக்கு

    உயிரிழந்த சிறுமிக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேரை பிடித்து காவல்துறை விசாரித்தனர். அதில் கார்த்திக் என்பவன் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதியானது. சிசிடிவி காட்சிகள் மற்றும் கார்த்திக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய மோகன்ராஜ் கைது செய்யப்பட்டார்.

    200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்தனர். பாழடைந்த வீடு ஒன்றில் கார்த்திக் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கார்த்திக் தங்கியிருந்த வீட்டை காவல்துறை சுற்றி வளைத்தனர். அங்கிருந்து தப்பிப்பதற்காக கார்த்திக் சுவர் ஏறி குதிக்கும்போது கார்த்தியின் கால் மற்றும் கையில் முறிவு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    மாவு கட்டு

    அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ஏடிஜிபி மகேஸ்வர் தயாள், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி ஆகியோர் ஆய்வு செய்தனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான கார்த்திக்கு வருகிற 5 ஆம் தேதி வரையிலும், மோகன்ராஜ்க்கு வருகிற 27 ஆம் தேதி வரையிலும் நீதிமன்ற காவல் விதித்து சூலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சிறுமி வழக்கின் குற்றவாளி கார்த்திக் மாவு கட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போட்டோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு வலது கை மற்றும் வலது கால் ஆகியவற்றில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

    English Summary

    Coimbatore girl: Coimbatore Girl Sexual harassment murder case main accused Karthik Getting treatment with Maavu Kattu. Photo going viral on social media.