கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிறுமி மாயமானது தொடர்பாக காவல்துறைக்கு புகார் வருவதற்கு முன்பே சம்பவம் நடைபெற்றுள்ளது என்று தவெக அமைச்சர் சம்பத்குமார் கூறியுள்ளார்.
கோவையில் உயிரிழந்த சிறுமி குடும்பத்தினருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சம்பத்குமார், "சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகளிடம் பேசினோம். புகார் வருவதற்கு முன்பே சம்பவம் நடைபெற்றிருப்பது துரதிஷ்டவசமானது.
துரிதமாக செயல்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை துரிதமாக கைது செய்துள்ளனர். வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கைதான இரண்டு பேரும் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உடனடியாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி தருவதில் அரசு உறுதியாக உள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும். இதுவே இறுதியான சம்பவமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம், குற்றம் செய்பவர்களுக்கு பயம் இருக்க வேண்டும். அந்த வகையில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுக் கொடுப்பது எங்களது கடமையாக இருக்கும். தமிழகம் முழுவதும் வருகிற 27ஆம் தேதி முதல் சிங்கப்பெண்கள் பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது. இதன் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஆர்டிஓ மற்றும் காவல்துறை மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். முதல்வர் விரைவில் சிறுமி குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பார். எங்களுக்கு வந்த தகவலின்படி புகார் வருவதற்கு முன்பே சம்பவம் நடந்துள்ளது. இரவு 8 -9 மணியளவில் தான் புகார் வந்துள்ளது. ஆனால் சிறுமி மாயமான ஒரு மணி நேரத்திலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதியை நான் பார்க்கவில்லை, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இரண்டு பேர் தான் தற்போது வரை குற்றவாளி என சொல்லி இருக்கின்றனர். பெண்கள் பாதுகாப்பில் எங்கள் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை கடுமையாக இருக்கும். குற்றம் நடைபெற்ற பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்க கூடிய பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தபடும்" என்றார்.உச்சபட்ச தண்டனை
புகார் வருவதற்கு முன்பே
கோவை சிறுமி வழக்கில் கடும் நடவடிக்கை