கோவை: கோயமுத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகள், உள்வாடகைக்கு விடப்பட்டது தொடர்பாக 25 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த அரசு ஊழியர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
கோவை, கவுண்டம்பாளையத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 1,848 வீடுகள் உள்ளன. அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு ஏற்ப இங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி இங்கு ஏ டைப் வீடுகள் முதல் டி டைப் வீடுகள் வரை உள்ளன.
இந்த வீடுகளுக்கு வாடகையாக ரூபாய் 2,000 முதல் ரூபாய் 6,850 வரை வாடகை பிடித்தம் செய்யப்படுகிறது. இங்கு அரசு சார்பில் ஒதுக்கீடு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை அதிக வாடகைக்கு, தனி நபர்களுக்கு உள்வாடகையாக கொடுப்பதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கடந்த சில நாட்களாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களின் பெயர், விவரம் மற்றும் எந்த துறையில் அரசு ஊழியராக உள்ளார் என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 25 வீடுகளில் ஒதுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் குடியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகள் கூறும் போது ; அரசு ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை உள் வாடகையாக தனி நபர்களுக்கு கொடுத்து உள்ளதாக புகார்களை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 25 வீடுகள் உள் வாடகைக்கு விடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நோட்டீஸ் வீடுகளை காலி செய்ய அறிவுறுத்தி உள்ளோம் என்றனர். இதனிடையே ரேஸ்கோர்ஸ் மற்றும் சரவணம்பட்டியில் உள்ள வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீடுகளில் அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் கட்டி பல ஆண்டுகளை கடந்து விட்டதால் அந்த வீடுகளில் குடியிருப்போர் வீடுகளை காலி செய்ய வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பலர் வீடுகளை காலி செய்து உள்ளனர். மேலும் மேற்கண்ட வீடுகளில் காலி செய்யாமல் உள்ள 150 பேருக்கு வீட்டு வசதி வாரியம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அந்த நோட்டீஸில் வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்து விட்டதாலும், பழுதடைந்து உள்ளதாலும், உடனடியாக காலி செய்ய அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விவசாய நிலங்களை இனி 'வீட்டு மனை' ஆக்குவது மிக கடினம்.. ரியல் எஸ்டேட்டில் தமிழக அரசு புதிய ரூல்ஸ்