40 கி.மீ. சேஸிங்.. தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் 2 பேருக்கு கை முறிவு.. சம்பவம் செய்த கோவை போலீஸ்

  • கோவை: கர்நாடகாவில் இருந்து சுமார் 300 கிலோ குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேரை, சுமார் 40 கி.மீ. தூரம் காரில் தொங்கியபடி துரத்திச் சென்று போலீஸார் கைது செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில், கடத்தல்காரர்கள் இருவர் தப்ப முயன்றபோது கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட போலீஸார் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர்.

    Advertisement

    தப்ப முயன்ற கடத்தல்காரர்கள்

    காரின் பின்புறத்தில் மூட்டை மூட்டையாக பொருட்கள் இருப்பதைப் பார்த்த உதவி ஆய்வாளர் விக்னேஷ், அவற்றைச் சோதனையிட முயன்றார். அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், போலீஸாரைத் தள்ளிவிட்டு காரின் கதவுகளை மூடி, திடீரென காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

    இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமைக் காவலர் வேல்முருகன் உடனடியாக ஓடும் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துக் கொண்டார். ஆனால், போலீஸார் காரின் மீது இருப்பதையும் பொருட்படுத்தாமல் கடத்தல்காரர்கள் காரை தொடர்ந்து வேகமாக ஓட்டிச் சென்றனர். விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு, சித்ரா வழியாக கணியூர் சுங்கச்சாவடியை நோக்கி கார் சென்றது. அங்கு ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டு, தடுப்புகளை கடந்து கார் மீண்டும் வேகமாகச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

    Advertisement

    ஆகஷனில் இறங்கிய போலீஸ்

    இதற்கிடையே, காரின் மேற்கூரையில் தலைமைக் காவலர் வேல்முருகன் ஆபத்தான நிலையில் தொங்கியபடி செல்வதைப் பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போன்களில் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த கணியூர் போலீஸார், கணியூர் ஆம்புலன்ஸ், எல்.ஜி. மருத்துவமனை ஆம்புலன்ஸ், பாலா ஆர்த்தோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் சினேகம் ஆம்புலன்ஸ் நண்பர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து காரைத் துரத்திச் சென்றனர்.

    அவிநாசி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவிநாசி போலீஸாரும் காரை எதிர்நோக்கி விரைந்தனர். சுமார் 40 கி.மீ. தூரம் துரத்திச் சென்ற நிலையில் அவிநாசி அன்னபூர்ணா ஹோட்டல் அருகே வைத்து அந்த காரை மடக்கிப் பிடித்தனர். கார் நிறுத்தப்பட்டதும் அதில் இருந்த இருவர் தப்பியோடியதாகவும், ஒருவரை போலீஸார் உடனடியாகப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் தப்பியோடிய மற்ற இருவரையும் அவிநாசி போலீஸார் கைது செய்தனர்.

    Advertisement

    இருவருக்கு கை முறிவு

    தப்பியோட முயன்ற கடத்தல்காரர்களான சுரேஷ்குமார், ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் தடுக்கி விழுந்ததில் சுரேஷ்குமாருக்கு இடது கையும், ராஜேஷ்குமாருக்கு வலது கையும் முறிந்தது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெங்களூருவில் இருந்து சுமார் 300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்து கோவையில் கைமாற்ற முயன்றதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் சுமார் 300 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    Two gutka smugglers suffered hand fractures while trying to flee after Coimbatore police chased their car for nearly 40 km and seized around 300 kg of banned tobacco products.