கோவை: கோவையில் பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் திறந்து வைத்த முதல்வர் விஜய் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா செல்லத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பலத்த மழை காரணமாக அவரது பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஹெலிகாப்டர் பயணம் தாமதமான நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம், காந்திபுரத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பெரியார் அறிவுலகம் மற்றம் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 7 தளங்களுடன் நவீன முறையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. திமுக அரசால் கடந்த 2024 ஆம் ஆண்டு இப்பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருந்தது. தற்போது, பணிகள் முடிக்கப்பட்டு நிலையில் இன்று முதல்வர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
இதற்காக முதல்வர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவைக்கு காலை 11 மணியளவில் வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக வந்தார். பல்வேறு இடங்களில் ரோடு ஷோவும் மேற்கொண்டார். கோவை வந்த முதல்வர் விஜய்க்கு தவெகவினர், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, காந்திபுரம் பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார். பின்னர், நூலகத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலக கல்வெட்டை திறந்துவைத்தார். தொடர்ந்து அங்கிருந்த படைப்புகளை முதல்வர் விஜய் பார்வையிட்டார். தொடர்ந்து அரசு விழா நடைபெற்றது. இதில், முதல்வர் விஜய் புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்வர் விஜய் கேரள மாவட்டம், திருச்சூருக்கு ஹெலிகாப்டர் மூலமாக செல்வதாக இருந்தது. இதற்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவையில் பலத்த மழை பெய்து வருவதால் அவர் ஹெலிகாப்டரில் செல்வது தாமதமானது. மழை காரணமாகவும், மோசமான வானிலை காரணமாகவும் முதலமைச்சரின் கேரள பயணம் ரத்தாகியுள்ளது. இதன் காரணமாக, பிற்பகல் 3.30க்கு சிறப்பு விமானம் மூலமாக முதல்வர் விஜய் சென்னை செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
பெரியார் அறிவுலகம் திறப்பு
கோவையில் பலத்த மழை
விஜயின் கேரள பயணம் ரத்து