கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கோவைக்கு வளர்ச்சி திட்டங்கள் மிகவும் அவசியமாக உள்ளது. திமுக ஆட்சியில் கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அறிவித்தனர். இதற்கான ஆரம்பகட்ட பணி நடைபெற்றது. ஒண்டிப்புதூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கை எழுந்து வருகிறது. இதுகுறித்து அமைச்சர் சம்பத்குமார் விளக்கமளித்துள்ளார்.
கோவையில் அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆன்மிகம், கல்வி மற்றும் இயற்கை சார்ந்து கோவைக்கு ஏராளமானோர் சுற்றுலா வருகிறார்கள். மாவட்டத்தின் சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியளவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை முதலிடத்தை பெற வேண்டும் என்பதே முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசின் நோக்கமாக உள்ளது.
தமிழகத்தை சுற்றுலாத்துறையில் முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமாரும் கோவை மாவட்டத்தின் சிறப்புகளை நன்கு அறிந்தவர். கோவையில் சுற்றுலாத்துறை சார்ந்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களை ஏற்படுத்தித் தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவடைந்துள்ளதால் பணிகள் வேகமடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளும் விரைந்து முடிக்கப்படும். போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடந்த திமுக ஆட்சியை விட தவெக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் போதை தாக்கம் குறைந்துள்ளது. கோவை வளர்ச்சி பணிகள் போதைப்பொருளை கட்டுப்படுத்த காவல்துறை மூலம் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கிறோம். இதற்கு பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இல்லாத வீடுகளே இல்லை. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனமாக கண்காணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் மேற்பார்வையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை அழைத்து அடிக்கடி சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மாவட்டத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிகிறோம். கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டசபையில் விவாதம் எழுந்தது. இதுகுறித்து வருகிற திங்கள்கிழமை பதில் அளிக்கவுள்ளோம். முறையான விசாரணை நடத்தி அதற்கான பதில் நிச்சயம் தெரிவிக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டது. கடந்தாண்டு சமர்ப்பிக்கப்பட்ட திட்டமே நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை சரியான முறையில் சிறந்த அறிக்கை தயாரித்து, அனுமதி பெறும் வகையில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் ஏற்கனவே ஒண்டிப்புதூர் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையும் என்றனர். ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும். அங்கு சாத்தியம் இல்லாத பட்சத்தில் மாற்று இடங்களும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் தனுஷ் உள்பட ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்கவும், மக்களை சந்திக்கவும், ஆட்சி அமைக்க வாய்ப்பு கேட்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது. தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்" என்றார்.போதை பொருள் கட்டுப்படுத்தல்
சர்வதேச கிரிக்கெட் மைதானம்