கோயம்புத்தூர்: கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று கோயம்புத்தூரிலும் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கேரளாவில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழைதான் தற்போது கோயம்புத்தூரில் மண் சரிவை ஏற்பட்டுத்தியிருக்கிறது.
கோயம்புத்தூரின் எட்டிமடை பகுதியில், தனியார் கல்லூரியின் பின்புறம் மலை இருக்கிறது. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக இந்த மலையின் ஒரு சிறிய பகுதி திடீரென பலத்த சத்தத்துடன் சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மக்கள் மிகுந்த அச்சமடைந்திருக்கின்றனர். மண்சரிவு காரணமாக நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், சம்பவம் நடந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கனமழை காரணமாக வயநாடு போலவே, கோயம்புத்தூரிலும் மண் சரிவு ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.