எம்எல்ஏனா கொம்பா.. பாதிக்கப்பட்ட மக்களை அநாகரீகமாக பேசிய கோவை தவெக எம்எல்ஏ.. வலுக்கும் கண்டனம்

  • கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மழை பாதிப்பு பணியை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் களத்தில் இருந்து துரிதப்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கோவை தவெக எம்எல்ஏ சுகுமார், மழையில் பாதிக்கப்பட்ட மக்களை அநாகரீகமாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.

    Advertisement

    கோவை மாவட்டம், சூலூர் வட்டம் பள்ளபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியை சூலூர் தவெக எம்எல்ஏ சுகுமார் ஆய்வு செய்தார். பேரூராட்சி, வருவாய் துறை அதிகாரிகளுடன் அந்த பகுதிக்கு சென்று மக்களிடம் கருத்துகளை கேட்டார். அப்போது மக்களின் கருத்தை அவர் கேட்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

    Advertisement

    அநாகரீகமான வார்த்தை

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், "சுகுமாரின் பேச்சும், செயல்பாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இல்லை. மாறாக வெறுப்பையும் மற்றும் ஏமாற்றத்தையும் தரும் வகையிலும் அமைந்தது. கனமழை பெய்து இரவு ஏற்பட்ட வெள்ள நீரால் இங்குள்ள வீடுகள் அனைத்தும் பெருத்த சேதமடைந்தது. நள்ளிரவு என்றும் பாராமல், மூன்றடிக்கு மேலாக தேங்கிய மற்றும் இந்தப் பகுதிக்கு மேற்கு புறத்தில் அமைந்துள்ள விவசாய பூமியிலிருந்து,வேகமாக தொடர்ந்து வந்துகொண்டிருந்த மழை நீரையும் வெளியேற்றினர்.

    அருகில் இருந்த தனியார் பள்ளி வழியாக நீர் போவதற்கு வழி ஏற்படுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. ஆபத்தான சூழ்நிலையில் வேறு வழியில்லாமல்தான் பள்ளி வழியாக தேங்கிய மற்றும் தொடர்ந்து இப்பகுதிக்கு வந்து கொண்டிருந்த நீரை வெளியேற்றும் சூழ்நிலை ஏற்பட்டது. தக்க சமயத்தில் உரிய நடவடிக்கை எடுத்த நமது பள்ளபாளையம் பேரூராட்சி தலைவருக்கு முதற்கண் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    Advertisement

    எம்எல்ஏக்கு கண்டனம்

    எம்எல்ஏவும் மக்கள் பிரநிதி தான். அவர் என்ன நடந்தது என்று பொதுமக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக, அவருடன் வந்திருந்த பள்ளபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா பானு தவறான தகவல்களை கூறியுள்ளார். அதை நம்பி நிலைமையை விளக்க முயன்ற பொதுமக்களை அடக்கும் வகையில் நடந்து கொண்டார். அநாகரீகமான வார்த்தையை கூறி வாக்களித்த பொதுமக்களை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டார்.

    மக்கள் பிரதிநிதியான அவர் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேச வேண்டும். அப்படி பேசாமல் ஒருதலைபட்சமாக தனியார் கல்வி நிறுவனத்திற்கு சார்பாக பேசியது கண்டனத்திற்குரியது. அதேபோல் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறிய பள்ளபாளையம் பேரூராட்சி செயல் அலுவலரின் செயலும் கண்டனத்துக்குரியது. இவர் எதற்காக இப்பகுதிக்கு வந்தார் என்பதே எங்களுக்குப் புரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்தாரா அல்லது கட்டப்பஞ்சாயத்து செய்ய வந்தாரா.

    Advertisement

    இது ஜனநாயகமா

    ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்ற போக்கு ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஓட்டு கேட்கும்போது காலில் விழாத குறையாய் கேட்பது, பதவிக்கு வந்தவுடன் எஜமானர்களை போல் நடந்து கொள்வது, இதுதான் ஜனநாயகமா?!. ஓடம் ஒரு நாள் கப்பலில் ஏறும் கப்பலும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்" என்பதை மறந்துவிடாதீர்கள்" என்று கூறியுள்ளனர்.

    English Summary

    Coimbatore Sulur TVK MLA Sukumar sparked in controversy. Sulur rain affected people not happy with Sukumar's behaviour.