திரிஷா விஜய் புத்தகத்தை வாங்கியது யார்? தவெகவை வளைத்த திமுக.. சிக்கும் பெண்மணி!

  • கோவை: கோவையில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம்' நூலகம், சமீபத்தில் தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், திறக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் அளவுக்குப் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்து, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட ஒரு நூலகத்தில், போலியான புத்தகங்களை அதிக விலைக்கு வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்திலும் வாசகர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்துள்ள ஊழல்கள் அம்பலமாகி பெரும் அதிர்வுகளை உருவாக்கி வருகிறது. ஊழல்களுக்கு காரணம் தவெக அரசு தான் என்று திமுகவும், இல்லை..இல்லை.. திமுக ஆட்சியில் நடந்த ஊழல் இது என்று தவெக அரசும் மாறி மாறி குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    நூல்களை கொள்முதல் செய்வதற்காக திமுக ஆட்சியில் தான் கமிட்டி அமைக்கப்பட்டு நூல்கள் வாங்கப்பட்டன என்று பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் ஆதாரத்துடன் குற்றம் சாட்ட, திமுக ஆட்சியில் நூல்களை தேர்வு செய்து பர்சேஸ் செய்திருந்தால்... திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூலை திமுக ஆட்சியில் எப்படி தேர்வு செய்யப்படும்? என்று எதிர் குற்றச்சாட்டு களை பதிலடியாக தந்து வருகிறார்கள்.

    Advertisement

    வெடித்த சர்ச்சை: பெருமாள் முருகன் கிளப்பிய விவகாரம்

    பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் பெரியார் அறிவுலக நூலகத்தைப் பார்வையிட்ட பிறகு எழுதிய கட்டுரைதான் இந்த சர்ச்சைக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. நூலகத்தின் நான்காவது தளத்தில் 'அகல்விளக்கு' என்ற அதிகம் அறியப்படாத ஒரு பதிப்பகத்தின் சார்பில் சுமார் 1,800 புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்ததை அவர் கண்டறிந்தார்.

    பொதுவாக சந்தையில் 350 ரூபாய்க்கு விற்கப்படும் 300 பக்கங்கள் கொண்ட சாதாரணப் புத்தகங்கள், இந்த நூலகத்திற்காக 1,400 ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு வாங்கப்பட்டிருந்தன. மேலும், 400 வெண்பாக்கள் கொண்ட 'நாலடியார்' நூலை ஒரு கவிஞர் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், கீழடியில் கிடைக்காத சிலைகளை கீழடிச் சிற்பம் என்று அச்சிட்டிருந்ததும் தெரியவந்தது. வரலாற்றுத் தவறுகளும் போலியான தகவல்களும் நிறைந்த இந்தப் புத்தகங்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவசர கதியில் உருவாக்கப்பட்டவையா என்ற சந்தேகமும் எழுந்தது.

    Advertisement

    தவெக - திமுக இடையே வெடித்த வார்த்தைப் போர்

    இந்தப் புகார்கள் வெளிவந்தவுடன் ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகமும, எதிர்க்கட்சியான திமுகவும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி காரசாரமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகங்களைத் தேர்வு செய்யவும், கொள்முதல் செய்யவும் திமுக ஆட்சியில்தான் குழு அமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதமே இதற்கான கொள்முதல் முடிந்துவிட்டது. தவெக அரசு எந்தத் தவறையும் செய்யவில்லை; இது திமுக ஆட்சியில் நடந்த மெகா ஊழல்" என்று ஆவணங்களை முன்வைத்துச் சாடினார்.

    இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திமுகவினர், "நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டிருந்தால், 'திரிஷா விஜய்' என்ற பெயரில் எழுதப்பட்ட 'அதிகாரத்தின் நிழலில்' என்ற புத்தகத்தை எங்கள் ஆட்சியில் எதற்காகத் தேர்வு செய்து வாங்குவோம்? தங்களின் தவறுகளை மறைக்க எங்கள் மீது தவெக அரசு பழிபோடுகிறது" என்று எதிர்வாதம் செய்கின்றனர். இதனால் இந்த நூல்கள் யார் ஆட்சியில் வாங்கப்பட்டன, கோடிக்கணக்கான பணம் யாருக்குப் போய்ச் சேர்ந்தது என்ற உண்மை தெரியாமல் வாசகர்களும் பொதுமக்களும் குழம்பிப் போயுள்ளனர்.

    Advertisement

    விசாரணையில் சிக்கும் உயர் பொறுப்பு பெண்மணி?

    இந்த விவகாரத்தில் தற்போது மிக முக்கியமான ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கு இந்த நூல் கொள்முதல் தொடர்பான அனைத்து ரகசியங்களும் தெரியும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

    கடந்த திமுக ஆட்சியின்போது, அரசியல் செல்வாக்கு மற்றும் பெரிய இடத்துப் பரிந்துரை மூலமாக இவர் இந்த முக்கியப் பதவிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அரசு விதிகளின்படி குறிப்பிட்ட சுழற்சி முறை மூலமாகவே இந்தப் பணியிடம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவர் முக்கிய பின்புலம் கொண்டவர் என்ற காரணத்தைக் காட்டி, அந்த சுழற்சி முறையைக் கிடப்பில் போட்டுவிட்டு இவர் நியமிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

    Advertisement

    நூலகத்துறையின் அதிகார மையமாகத் திகழ்ந்த இவர் மூலமாகவே பல முக்கியக் கொள்முதல் முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தரப்பிலிருந்து கிடைத்த இந்தத் தகவல்களைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) சம்பந்தப்பட்ட அந்தப் பெண் அதிகாரியிடம் தீவிர விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    அறிவை வளர்க்க வேண்டிய நூலகங்கள் ஊழல் செய்யும் இடமாக மாறுவது தமிழ்நாட்டிற்குப் பெரும் அவமானம் என்று அரசியல் கட்சித் தலைவர்களும் எழுத்தாளர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் பல கோடிகள் கொள்ளையடிக்கப்பட்ட இந்த விவகாரத்தில் முறையான விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    போலி நூல்களை விநியோகித்து முறைகேடு செய்த பதிப்பகங்கள் மீதும், அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே தமிழக மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Coimbatore Periyar Arivulagam Book Scam: DMK vs TVK War Erupts Over Fake Books