ஒரே முயற்சியில் UPSC வெற்றி.. மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 2ம் இடம்! கோவை இளைஞர் சாதனை

  • கோவை: கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான அப்துல்லா அப்ரித் தனது விடாமுயற்சியால் தமிழ் வழியில் ஒரே முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் 942 ஆவது இடத்தையும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்து தனது ஐஏஎஸ் கனவை நோக்கி முன்னேறியுள்ளார்.

    Advertisement

    கோவை மாவட்டம், உக்கடம் அல் அமீன் காலனியைச் சேர்ந்தவர் அப்துல்லா அப்ரித். 25 வயதான அப்துல்லா குறைப் பிரசவத்தில் அதாவது ஆறு மாதத்தில் பிறந்ததால் உடலின் உறுப்புகளில் போதிய வளர்ச்சி இல்லை. இதனால், இவரால் சிறிது தூரம் கூட மற்றவர்களின் துணை இல்லாமல் நடக்க முடியாது. இருப்பினும், இவரது உடல் குறைகளை பெரிதாக எண்ணாத இவரது பெற்றோர் பள்ளிப் படிக்க வைத்துள்ளனர்.

    Advertisement

    அப்துல்லாவும் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு என முடித்து தன்னுடைய கடின உழைப்பால் யுபிஎஸ்சி தேர்விலும் தமிழ் வழியில் தேர்ச்சி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதுவும் ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளதுதான் ஹைலைட். கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 942 ஆவது இடத்தையும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து தனது ஐஏஎஸ் கனவை நனவாக்கியுள்ளார்.

    இதுகுறித்து, அப்துல்லா அப்ரித் கூறியதாவது: எனது அப்பா அப்துல் அஜீம், அம்மா சர்மிளா, தங்கை, நண்பர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், உறவினர்கள் என பலரின் உதவியோடு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். என்னால் மற்றவர்களின் உதவியில்லாமல் தனியாக இயங்க முடியாது. எனக்கு கண் பார்வை குறைபாடும் உள்ளது. அதனால், என்னுடைய அப்பா தான் பள்ளி, கல்லூரிகளில் புத்தகங்களை படித்துக் காண்பித்து கல்வியைக் கற்றுத் தந்தார்.

    Advertisement

    எனது அப்பா ஒரு நகைப் பட்டறையில் வேலை செய்யும் கூலி தொழிலாளி தான். சிவில் சர்வீஸ் தேர்வைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. இந்திய அளவில் உச்சபட்ச தேர்வு இதுதான். இருப்பினும், யார் முயற்சி செய்தாலும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறலாம். நான் தற்போது சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். தேர்வு எழுதுவதற்கு கடும் பயிற்சி மேற்கொண்டேன்.

    இதற்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் பயிற்சி மேற்கொண்டேன். என்னால் செவி வழியாக கேட்டுத்தான் படிக்க முடிந்தது. டெல்லியில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் நேர்காணல் நடத்திய அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். என் மனதில் தோன்றிய அனைத்து பதில்களையும் கூறினேன்.

    Advertisement

    சிவில் சர்வீஸ் தேர்வை தமிழில் தான் சந்தித்து தேர்ச்சி பெற்றேன். ஐஏஎஸ் தேர்வு எழுதுவோர் முதலில் தங்களை மாணவர்கள் என்று நினைக்கக் கூடாது. ஐஏஎஸ் அதிகாரி என்று நினைத்து படிக்கத் தொடங்கினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். எங்கள் பேட்சில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி ஆணையை மத்திய அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கவுள்ளது என்றார். கனவுகளுக்கு எதுவும் தடை இல்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ள அப்துல் அப்ரித்தின் சாதனை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    English Summary

    Coimbatore’s Abdul Abreeth cleared the UPSC Civil Services Examination in Tamil medium in his first attempt, securing AIR 942 and second rank among PwD candidates.