கோவை: கோவையில் பள்ளி மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் நம்பிக்கை இல்லை என பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி இருந்தனர்.
கோவை பீளமேடு ஏ.டி.காலனியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் கேரளம் மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவுசல்யா தேவி. இவர்களுக்கு அகிலன் (16 வயது) என்ற மகன் இருந்தார். அகிலன் பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் ஆயுதபூஜை விடுமுறை முடிந்த பின்னர் கடந்த புதன்கிழமை காலையில் அகிலன் பள்ளிக்கு சென்றார். பள்ளி தொடங்குவதற்கு முன்பு பிரார்த்தனை நேரம் நடக்கும்போது சக மாணவர்கள் அகிலனை சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவர் அகிலன் வீட்டுக்கு சென்றுவிட்டார். பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் அகிலன் தனியாக இருந்தார். மாணவர்கள் தொடர்ந்து பல நாட்களாக சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்து வந்ததால் கடுமையாக விரக்தியடைந்த அகிலன் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பள்ளியில் வகுப்பு ஆசிரியர், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் யார் யார் எனக் கேட்டதற்கு மாணவர் அகிலன் எழுந்துள்ளார். அப்போது முதல், அகிலனை சில மாணவர்கள் தனிமைப்படுத்தி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் நேற்று மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் 2 மாணவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாணவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு மையத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைக் கைது செய்ய வலியுறுத்தி மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று போராட்டம் 6வது நாளாக தொடர்ந்து வந்தது. ஆசிரியர்களை கைது செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர். மேலும், போலீஸ் விசாரணையில் நம்பிக்கை இல்லை என பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி இருந்தனர். இந்நிலையில், பள்ளி மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.