கோவை மாணவர் கொலை: போதைப்பொருள் புகாரா?.. செல்போன் விவகாரமா?.. கல்லூரி நிர்வாகம் புதிய விளக்கம்

  • கோவை: கோவை மாவட்டம், ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர் அமுதன் போதைப்பொருள் தொடர்பாக தகவல் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டிய நிலையில், இந்தக் கொலைக்கு போதைப்பொருள் விவகாரம் காரணமில்லை என்றும், சீனியர் ஜூனியர் மோதல் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவமே பின்னணியில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது கல்லூரி நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளது.

    Advertisement

    கள்ளக்குறிச்சி மாவட்டம், வள்ளலார் வீதியைச் சேர்ந்த கென்னடி என்பவரின் மகன் அமுதன் (19). இவர், கோவை மாவட்டம், ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ஜூலை 24 ஆம் தேதி கல்லூரி விடுதியில் பணியாற்றி வந்த வடமாநில சமையல் பணியாளரைத் தாக்கியுள்ளார். இதுகுறித்து அமுதனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஹாஸ்டலில் இருந்து அமுதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    Advertisement

    முகமூடி கும்பல்

    இதையடுத்து, அமுதன் தன்னுடைய நண்பர்களுடன் ஒத்தக்கால்மண்டபம் அருகே அறை எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதே கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் இளவரசன் என்ற மாணவர் தனது மாணவர்களுடன் ஒத்தக்கால்மண்டபம் பூங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை அறையில் தங்கியுள்ளார்.

    இந்நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி அதிகாலையில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று இளவரசன் தங்கியிருந்த அறைக்குச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி, மாணவர்களைத் தாக்கி செல்போன்களை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. அவர்களைத் துரத்திக் கொண்டு மாணவர்கள் சென்ற போது அமுதனின் முகமூடி விலகியுள்ளது. இதுகுறித்து இளவரசன் அளித்த புகாரின்பேரில் செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    Advertisement

    அடையாளம் கண்டுபிடிப்பு

    அன்றைய தினமே காலையில் அமுதன் மற்றும் அவரது நண்பர்கள் மலுமிச்சம்பட்டி அருகே நடந்து சென்றுள்ளனர். அப்போது செல்போன் பறிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் அமுதனை பார்த்தவுடன் அடையாளம் கண்டு அவனை வழிமறித்து, அமுதன் மற்றும் ஸ்ரீமன் என்ற இருவரையும் கல்லூரி பின்புறத்தில் உள்ள கிரவுண்டுக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

    பலத்த காயமடைந்த அமுதன் தன்னுடைய அறைக்கு வந்து படுத்துள்ளார். கல்லூரி முடிந்து அறைக்கு வந்த மாணவர்கள் பார்த்தபோது அமுதன் மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளார். உடனடியாக மீட்டு அமுதனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    Advertisement

    போதைப்பொருள் விவகாரமா

    இதுகுறித்து, அமுதனின் பெற்றோர் கூறுகையில், சக மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததால் சக மாணவர்கள் அமுதனை தாக்கி கொலை செய்ததாக அவரது தந்தை குற்றம்சாட்டியிருந்தார். கல்லூரி நிர்வாகத்தினர் தனது மகனிடம் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சில மாணவர்களின் பெயர்களை கேட்டதாகவும், அந்த தகவல் வெளியே கசிந்ததால் அமுதன் கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    ஆனால், அமுதன் கொலைக்கு போதைப்பொருள் விவகாரம் காரணமில்லை என்றும், சீனியர் ஜூனியர் மோதல் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவமே பின்னணி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    கல்லூரி நிர்வாகம் விளக்கம்

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அழுதனின் கல்லூரி நிர்வாகம் புதிய விளக்கத்தை அளித்துள்ளது. அதில், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த அமுதனின் உயிரிழப்பு மிகவும் வேதனை அளிக்கிறது. கடந்த ஜூலை 21 ஆம் தேதி இரவு கல்லூரி விடுதியில் பணியாற்றி வரும் சமையல் பணியாளர் மனோஜ் என்பவரை அமுதன், அஜிஸ் ஆகிய இருவரும் தாக்கியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் ஒழுங்கு குழு முன்பு விசாரணைக்கு ஆஜர் செய்யப்பட்டனர்.

    அப்போது, சமையல் கலைஞரை தாக்கிய சம்பவத்தை ஒப்புக் கொண்டனர். அஜிஸ் தனுது பெற்றோருடன் கல்லூரிக்கு வந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, ஜுலை 24 ஆம் தேதி தேதி அமுதனின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி அமுதன் மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தகவல் வந்தது. பின்னர், அவர் உயிரிழந்துவிட்டார்.

    Advertisement

    பொய் குற்றச்சாட்டு

    போதைப் பொருள் தொடர்பாக எந்தப் புகாரும் இல்லை. அப்படி சொல்லபடும் செய்தி தவறானது. மாணவர்கள் தாக்கிக்கொண்ட விவகாரம் பற்றி எங்களுக்கு தெரியவில்லை. கைதான 5 மாணவர்களில் எங்கள் கல்லூரியைச் சேர்ந்த ஒரு சில பேரும் அதில் இருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 15 மாணவர்களின் பெயர் பட்டியலை காவல் துறையிடம் வழங்கி உள்ளோம்.

    இந்த வழக்குத் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அமுதனின் பெற்றோர் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. போதைப் பொருள் தொடர்பாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்றும், அந்த விவகாரம் தொடர்பாக கல்லூரியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கல்லூரி நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

    அமுதன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி அடுத்தகட்ட விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    The college management has denied the drug complaint allegations in the Coimbatore student murder case, while police say the incident was linked to a mobile phone theft and senior-junior dispute.