கோவை மாணவர் தற்கொலை வழக்கு.. ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்.. பள்ளி நிர்வாகம் அதிரடி

  • கோவை: கோவையில் சாதிய தீண்டாமை காரணத்தால் அகிலன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தியும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் மற்றும் அரசியல் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் அகிலன் (16). இவர் அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் கே.கே.நாயுடு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு பயின்று வந்தார். பள்ளியில் சக மாணவர்கள் இவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் மாட்டிறைச்சி உண்பது தொடர்பாகக் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    கைது செய்யக் கோரிக்கை

    இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் மன வேதனைக்கு ஆளான மாணவர் அகிலன் கடந்த புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவத்தில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், கே.கே.நாயுடு பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் மாணவரின் பெற்றோர், உறவினர்களுடன் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.

    பள்ளி நிர்வாகம் அதிரடி

    தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது வாயிலில் இருந்து பிரதான வாயில் வரை பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கரியப்பனவரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுவை அளித்தனர். இதற்கிடையே, மாணவர் அகிலன் தற்கொலை விவகாரத்தில் வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இவ்வழக்கு தொடர்பாக பீளமேடு காவல் துறையினர் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    Following the death by suicide of 16-year-old Akilan in Coimbatore amid allegations of caste discrimination, the school management has suspended the class teacher and headmaster, while police continue their investigation.