தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி வழக்கு.. குற்றவாளிகள் மீது பாய்ந்த ஆக்‌ஷன்! பரபரப்பான கோவை!

  • கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன் குமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    கோவை மாவட்டத்தை சேர்ந்த தம்பதியின் 10 வயது மகள் கடந்த 21ஆம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில், கண்ணம்பாளையம் செல்லும் வழியில் உள்ள தென்னந்தோப்பில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இதையடுத்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சூலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல மணி நேரம் வாகனங்கள் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கோவை மண்டல ஐஜி ரம்யா பாரதி, டிஐஜி சாமிநாதன், எஸ்பி பவன்குமார் ரெட்டி உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று உறுதியளித்த பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது.
    இதற்கிடையே, போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்தி என்ற நபர் சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த கார்த்தியை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை கார்த்தி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த குற்றத்தில் அவரது நண்பர் மோகன் குமார் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மோகன் குமாரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்தி, கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து குதிக்க முயன்றபோது காயமடைந்தார். பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தி, நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். மோகன் குமாரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஆகியோர் கோவைக்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    அதேபோல், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில், சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய இந்த கொடூர குற்றத்தை கருத்தில் கொண்டு, கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன் குமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் நீண்ட காலம் சிறையில் வைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் சிறுமி மீதான இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

    English Summary

    Goondas Act imposed on two accused in Coimbatore Sulur 10-year-old girl rape and murder case.