கோவை: கோவை மாநகரில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், கனரக வாகனங்கள் மாநகருக்குள் நுழைவதற்கான நேரக் கட்டுப்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை மாவட்டம் உள்ளது. ஏற்கனவே குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் இதயமாக கோவை உள்ளது. கடந்த சில வருடங்களாக ஐடி துறையிலும் கோவை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல், உலகளவில் பல்வேறு நாடுகள் தங்களின் கிளையை கோவையில் திறந்து வருகின்றன. கோவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன. கோவையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் கோவைக்கு ஏராளமான மேம்பாலங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவை மாநகரில் யூடர்ன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகளில் ரவுண்டானா, மற்றும் சிக்னல்களை தவிர்த்து யூடர்ன் முறைகள் கொண்டு வரப்பட்டன. இதற்கு ஆரம்பத்தில் சற்று வரவேற்பு கிடைத்தாலும், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக அமையவில்லை. இப்போதும் கூட தினசரி கோவை மாநகர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. இதற்கு தீர்வு காணும் கோவை மாநகர காவல் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை மாநகரத்தில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்கள் மாநகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கத்தால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி சாலை விபத்துக்கள் நிகழ்ந்து வருகிறது. அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவுப்படி மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட நேரத்தை காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசல்
யூடர்ன் முறை
கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு
நேர மாற்றம் அறிவிப்பு