மனுசங்களே தோத்துருவாங்க.. கோவையில் கழுதைகளுக்கு பிரமாண்ட திருமணம்.. மொத்த கிராமமும் கொண்டாட்டம்

  • கோவை: கோவை என்றாலே விசித்தரமான கலாச்சாரம் இருக்கும். கொங்கு மண்டலத்தின் பாரம்பர்ய முறை இப்போதும் பின்பற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். கோவை கிராமத்தில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்யும் சடங்கு நிறைவேற்றப்பட்டது.

    Advertisement

    எல்நினோ காரணமாக உலகம் முழுவதுமே இந்தாண்டு பருவநிலை மாறுபாடு பிரச்சனை பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. காவிரியிலும் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுக்கிறது. விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது. போர்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    Advertisement

    கழுதைக்கு திருமணம்

    கோவை மாவட்டம், அன்னூர் அருகே லக்கேபாளையம் கிராமம் உள்ளது. அங்கே கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யவில்லை. இதன் காரணமாக கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. வருண பகவானின் அருளைப் பெற்று, மழை பெய்ய மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கிராமத்தில் பின்பற்றப்படும் பாரம்பரிய முறைப்படி கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைக்க லக்கேபாளையம் கிராம மக்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி, லக்கேபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் 'பஞ்ச கல்யாணி' முறைப்படி இன்று கழுதைகளுக்கான திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், அருகில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன. இரண்டு கிராம மக்களும் இணைந்து திருமணத்தை கோலாகலமாக நடத்தினர்.

    Advertisement

    2 கிராமங்களில் கோலகலம்

    மனிதர்களுக்கு நடக்கும் திருமணத்தை போலவே பெண் கழுதைக்கு புடவை கட்டி, வளையல், பாசி மணிகள் அணிவித்து, உதட்டுச்சாயம் மற்றும் நகச்சாயம் பூசி புதுப்பெண் போல அலங்கரித்தனர். ஆண் கழுதைக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மணமகன், மணமகள் அழைப்பு ஊர்வலம் மற்றும் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மங்கள வாத்தியங்கள் மற்றும் மேளதாளம் முழங்க பெண் கழுதைக்கு தாலி கட்டப்பட்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தில் பங்கேற்ற கிராம மக்கள் மொய் பணம் வழங்கி கழுதைகளை ஆசீர்வதித்தனர். தொடர்ந்து மறுவீடு அழைப்பு நிகழ்வு நடத்தப்பட்டு, வந்திருந்த அனைவருக்கும் கம்பங்கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான வறட்சி நிலவியபோது, இதேபோல் கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததால் நல்ல மழை பெய்தது. இந்த வழிபாட்டின் மூலம் நிச்சயம் மீண்டும் ஊரில் நல்ல மழை பொழியும் என்று அந்த கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    English Summary

    Southwest monsoon affected due to elnino. Coimbatore village conducted wedding to donkeys for rain.