கோவை வள்ளியம்மாள்.. 7ம் வகுப்பில் பாதியில் நின்றவர்.. 25 வருடம் கழித்து செய்த சாதனை

  • கோவை: பள்ளி படிப்பை ஏழாம் வகுப்புடன் நிறுத்திவிட்டு, இரண்டு குழந்தைகளுக்கு தாயான 37 வயது பெண், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். எத்தனை வருடம் கழிந்தாலும் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து படித்து 10ம் வகுப்பு தேர்வில் வென்றுள்ளார் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள். அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    Advertisement

    கல்விதான் பெண்களின் சொத்து.. நிறைய பெண்கள் இன்றைக்கு படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரையிலும் படிக்காமல் யாரும் இடையில் நிற்க முடியாது.. 12ம் வகுப்பு படிக்காமல் கைவிடுவதும் கடினம். கல்லூரி படிப்பை முடிக்காமல் போனவர்களும் மிக குறைவு என்கிற நிலையை எட்டிவிட்டோம். அதுதான் தமிழ்நாடு, கல்வி வேலைவாய்ப்பில் சிறந்து விளங்க காரணமாக உள்ளது. பொருளாதார ரீதியாக தமிழ்நாடு முன்னேறவும் கல்வி தான் காரணம். எப்படியாவது படிச்சுடுடா பரமா என்று ஒவ்வொரு தந்தையும், ஒவ்வொரு தாயும் இங்கே ஊக்குவிக்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் படிப்பை கைவிட்டவர்கள் பலர் தவிக்கிறார்கள். அவர்களும் தற்போது வயதை கடந்தும் படித்து சாதிக்கிறார்கள். அப்படி வென்ற கோவை வள்ளியம்மாள் பற்றி பார்ப்போம்.

    Advertisement

    கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாளுக்கு 37 வயது ஆகிறது. இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் தற்போது சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகன் இந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு செல்கிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வள்ளியம்மாள் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    25 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாள் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது தந்தை இறந்ததாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் படிப்பை பாதியில் விட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

    Advertisement

    இதையடுத்து வள்ளியம்மாள் கூலி வேலை பார்த்துக்கொண்டே படிக்க தொடங்கினார். தொடர்ந்து 8-ம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அவரது முயற்சியை பலரும் பாராட்டினார்கள் குழந்தைகளும் உறுதுணையாக இருந்தனர். இதையடுத்து வேலை பார்த்துக்கொண்டே 10-ம் வகுப்பு படித்தார். அவர் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.

    நேற்று முன்தினம் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் வள்ளியம்மாள் வெற்றி பெற்றார். அவர் தமிழ்-49, ஆங்கிலம்-53, கணிதம்-35, அறிவியல்-51, சமூக அறிவியல்-35 என மொத்தம் 223 மதிப்பெண்கள் பெற்றார். முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்ற அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளார். தொடர்ந்து அவர் மேல்படிப்பு படிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பலரும் 8ம்வகுப்பு, 9 ஆம் வகுப்பு, 10ம் வகுப்பு என்று அந்த காலத்தில் படிப்பை கைவிட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் எல்லாம் இனி போய் நான் படித்தால் படிப்பு வருமா.. படிக்க முடியுமா என்று யோசித்து படிக்காமலேயே விட்டுவிடுவார்கள். ஆனால் படிக்க வயது தடையில்லை என்று வள்ளியம்மாள் நிரூபித்துள்ளார். "பெண்கள் தங்களின் உரிமைகளைப் பேசவும், ஏமாறாமல் இருக்கவும் கல்விதான் ஒரே ஆயுதம். அதற்கு வயது முக்கியமல்ல" என்பதே படிக்கும் பல பெண்களின் குரலாக உள்ளது.

    English Summary

    In Coimbatore, a woman who dropped out of school 25 years ago passes the 10th-grade examination at the age of 37.