கோவை அருகே இப்படியொரு அதிசயமா? 25 ஆண்டாக பட்டாசு சத்தமே கேட்காத கிராமம்.. சிலிர்க்க வைக்கும் பின்னணி

  • கோவை: தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் எனக் கொண்டாட்டம் களைகட்டும். ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மட்டும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டாசு சத்தமே கேட்பதில்லை. காரணம், அங்குள்ள மரங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான வவ்வால்களும் பறவைகளும்தான். தங்களின் பண்டிகைக் கொண்டாட்டத்தால் அவற்றின் வாழ்வு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ஒட்டுமொத்த கிராமமும் பட்டாசுகளைத் தவிர்த்து வருகிறது. இதைவிட இன்னொரு சிறப்பும் உள்ளது.. அது என்ன தெரியுமா?

    Advertisement

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே அமைந்துள்ள கிட்டாம்பாளையம் கிராமம், இந்த வித்தியாசமான நடைமுறையை 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றி வருகிறது.

    Advertisement

    ஊரின் பல பகுதிகளில் வளர்ந்து நிற்கும் பழமையான ஆலமரங்கள், அரச மரங்கள், நாவல் மரங்கள் உள்ளிட்ட மரங்கள் பல உயிரினங்களுக்குத் தங்குமிடமாக உள்ளன. குறிப்பாக, நூற்றுக்கணக்கான வவ்வால்களும் பல்வேறு பறவைகளும் இந்த மரங்களை சார்ந்து வாழ்கின்றன.

    கோவை கிட்டாம்பாளையம்

    பண்டிகை காலங்களில் எழும் பட்டாசு வெடிச்சத்தம் மனிதர்களுக்கு சில நொடி பரவசத்தை கொடுக்கலாம். ஆனால், அதே சத்தம் மரங்களில் தங்கியிருக்கும் பறவைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை ஏனோ பலரும் நினைப்பதில்லை..

    இந்த திடீர் அதிர்வுகளால் அவை தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறுவதுடன், கூடுகளில் இருக்கும் குஞ்சுகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. இந்தப் பாதிப்புகளை, கிட்டாம்பாளையம் கிராம மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, தங்களுடைய கொண்டாட்டத்தால் மற்ற உயிர்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்று முடிவும் செய்தனர்.

    Advertisement

    அந்த முடிவு இன்றுவரை மாறாமலும் தொடர்கிறது... ஒரு தலைமுறை எடுத்த முடிவை அடுத்த தலைமுறையும் ஏற்றுக்கொண்டு வருவது இந்தக் கிராமத்தின் தனித்துவமாக மாறியிருக்கிறது.

    ஹைலைட் என்ன தெரியுமா?

    கிட்டாம்பாளையம் மக்களின் இயற்கை மீதான அக்கறை தீபாவளியுடன் முடிந்துவிடுவதில்லை...பொதுவாகத் திருமணங்கள், கோயில் திருவிழாக்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்கள் எனப் பல்வேறு நிகழ்வுகளில் பட்டாசுகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், இங்குள்ள மக்கள் இத்தகைய நிகழ்வுகளிலும் வெடிகளை தவிர்த்து வருகிறார்களாம்..

    வெடிச்சத்தம் பறவைகளையும் வௌவால்களையும் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நடைமுறையை பின்பற்றுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு பண்டிகைக்காக மட்டும் பட்டாசுகளைத் தவிர்ப்பது எளிது. ஆனால், ஊரின் ஒட்டுமொத்த நிகழ்வுகளிலும் அதே கொள்கையைக் கடைப்பிடிப்பது என்பது அந்த மக்களின் வாழ்க்கையோடு இயற்கைப் பாதுகாப்பு எந்த அளவுக்கு இணைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

    Advertisement

    குழந்தைகளிடம் தொடங்கும் மாற்றம்

    பட்டாசு வெடிப்பது குழந்தைகளுக்கு இயல்பாகவே ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. வண்ண வண்ண மத்தாப்புகள், சத்தமாக வெடிக்கும் பட்டாசுகள் எனத் தீபாவளியின் மகிழ்ச்சியை அவர்கள் தங்களுக்கான விதத்தில் எதிர்பார்ப்பார்கள். ஆனால், கிட்டாம்பாளையத்தில் வளரும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியின் இன்னொரு முகம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    தங்களைச் சுற்றி வாழும் பறவைகளும் உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதைச் சிறு வயதிலேயே அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அதனால் பட்டாசுகள் இல்லாத தீபாவளி அவர்களுக்குப் பழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. புத்தாடைகள் அணிவது, இனிப்புகளை பகிர்வது, உறவினர்களுடன் நேரம் செலவிடுவது, வீடுகளின் முன்பு அகல் விளக்குகளை ஏற்றுவது எனப் பண்டிகையின் மகிழ்ச்சியை வேறு வழிகளில் வெளிப்படுத்துகின்றனர்.

    Advertisement

    மரங்களே உயிர்களின் வீடு

    வெடிகளை தவிர்ப்பதுடன் தங்களுடைய பொறுப்பு முடிந்துவிட்டதாக இந்தக் கிராம மக்கள் நினைக்கவில்லை. பறவைகள் தொடர்ந்து வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.. ஆலமரம், அரசமரம், அத்தி, நாவல், கொய்யா உள்ளிட்ட மரங்களைப் பொது இடங்களிலும் விவசாய நிலங்களை சுற்றிலும் நட்டு வளர்க்கிறார்கள்..

    இத்தகைய மரங்கள் பறவைகளுக்க தங்குமிடமாக மட்டுமல்லாமல், உணவு கிடைக்கும் இடமாகவும் அமைகின்றன. இதனால் உள்ளூர் பறவைகளுடன் பருவகாலங்களில் வேறு பகுதிகளிலிருந்து வரும் வலசைப் பறவைகளுக்கும் இந்த பகுதி பாதுகாப்பான இடமாக திகழ்கிறது.

    இனிவரும் காலங்களில் கிட்டாம்பாளையம் கிராமத்தின் எல்லையை தாண்டி, ஒட்டுமொத்த ஊராட்சியிலும் அதிக மரங்களை வளர்ப்பதே தங்களுடைய நோக்கம் என்று கிராம மக்கள் சொல்கிறார்கள்.

    Advertisement

    வாழ்க்கை பாடம்

    ஆக, ஒரு பண்டிகையின் மகிழ்ச்சி என்பது நம்முடைய வீட்டுக்குள் மட்டும் இருக்க வேண்டியதில்லை. நம்மை சுற்றி வாழும் உயிரினங்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

    பட்டாசு வெடிக்காமல் இருப்பது ஒரு கிராமத்தின் பழக்கமாக மாறியிருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் புரிதலும் பொறுப்புணர்வும் இருக்கின்றன. அந்த வகையில், கிட்டாம்பாளையம் மக்களின் தீபாவளி கொண்டாட்டம் மற்றவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு வாழ்க்கை பாடமாகவே அமைந்திருக்கிறது...!!

    English Summary

    Life Lessons from Coimbatore's Kittampalayam.. A Village That Has Avoided Firecrackers for 25 Years