கோவை: நடிகர் தனுஷ், முதல்வர் விஜய் பாணியில் நடிகராக இருந்து அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள், அதற்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட கொடி மற்றும் சமூக வலைதளங்களில் நடக்கும் செயல்பாடுகள் இதனை உறுதிப்படுத்தி உள்ளன. தற்போது தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த நடிகர் தனுஷ் உத்தரவிட்டுள்ளார். தனுஷ் ரசிகர் மன்றம் வெளியிட்ட அறிவிப்பில், கோவை மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கோவையில் இருந்தே தனது அரசியல் பயணத்திற்கு அஸ்திவாரத்தை தனுஷ் போட இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தனது திருமணம் தொடங்கி பல்வேறு சந்தர்பங்களில், தனது ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் நெருக்கமாகவே இருந்து வந்தார். தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அடிக்கடி சந்திப்பார். அவர்களுக்கு விருந்து வைப்பார். அதேபோல் அவர்கள் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வார். அண்மை காலங்களில் தனுஷ் சினிமாவை தாண்டி, ரசிகர் மன்றதை பலப்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகர் தனுஷ் 'கர' திரைப்படத்தைத் தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்பட மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் தனுஷ் திரைப்படங்களில் பிசியாக நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் மிகவும் நெருக்கமான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். வாரம் ஒருமுறை மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து, மன்ற செயல்பாடுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அன்னதானம், ரத்ததானம் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற நலத்திட்ட பணிகளை மன்றங்கள் மூலம் தனுஷ் செய்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ், அண்மையில் ரசிகர் மன்ற கொடியை வெளியிட்டார்.அதன்பிறகு திருவள்ளூரில் உள்ள பிரபல கல்லூரியில் பிரம்மாண்டமான முறையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த சூழலில் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தவும், உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் தனுஷ் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளாராம். தமிழகம் 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மாவட்ட அளவில் மட்டுமல்லாது, தொகுதி வாரியாகவும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளாராம். கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட தொகுதிகளில் நற்பணி மன்றங்களைத் தொடங்கி, புதிய உறுப்பினர்களை அதிக அளவில் இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் வி.சுப்பிரமணியம் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த செயல்பாடுகளை பார்க்கும் போது, தனுஷ் அரசியலில் தீவிமாக களம் இறங்குவதற்கு அடித்தளம் போடுகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றிப்பயணம் இளம் நடிகர்களுக்கும், வளர்ந்த நடிகர்களுக்கும் புதிய உத்வேகத்தை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் திரையுலகைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் களம் கண்டிருக்கிறார்கள். தனுஷின் தற்போதைய மன்ற நடவடிக்கைகள் அரசியலை நோக்கி நகர்வதாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக தனுஷ் கோவையை தேர்வு செய்திருப்பதை பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஏனெனில் பலரும் கோவையைத்தான் விரும்பியிருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசன், அண்ணாமலை உள்பட பலர் கோவையை அரசியல் களமாடவே விரும்பி உள்ளார்கள். தனுஷ் மன்றத்தின் முதல் அறிக்கையில், கோவையை தேர்வு செய்திருப்பதும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மன்ற நிர்வாகிகள் கூறும் போது, 'மன்றத்தைப் பலப்படுத்துவதற்காகவே உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்கள். கோவையில் முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் என்றும், தனுஷின் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்கள்.