திமுக மாநில நிர்வாகி திடீர் விலகல்.. பரபரக்கும் கோவை அரசியல் களம்!

  • கோவை: கோவையைச் சேர்ந்த திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையில், கட்சிக்குள் சலசலப்புகள் எழுந்து வரும் நிலையில், இவர் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது கோவை மாவட்ட திமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    மீனா ஜெயக்குமார் திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநில துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். 'ஆலம் விழுதுகள்' என்ற அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கட்சித் தலைமையிடம் சீட் கேட்டு காய்நகர்த்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    Advertisement

    மீனா ஜெயக்குமார் விலகல்

    மீனா ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வணக்கம். இன்று முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். மேலும் நான் இதுவரை பயணித்த இந்த அரசியல் பயணத்தில் என்னுடன் இணைந்து என்னை ஆதரித்து, ஊக்கப்படுத்தி, வழிநடத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி!" எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக மீனா ஜெயக்குமார், அண்மையில் அ.தி.மு.கவின் எஸ்.பி. வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் திமுக கட்சியினரிடம் இருந்து கடும் எதிர்வினைகள் எழுந்தன.

    Advertisement

    லீமா ரோஸ் மார்ட்டினுடன் சந்திப்பு

    இது தொடர்பாக மீனா ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோவில், "நான் கொலை குற்றமா செய்தேன்? தீவிரவாதியை பார்த்து வந்தோமோ? இதற்கு இவ்வளவு எதிர்ப்பு? இந்த கட்சி தோற்க காரணமே, சோசியல் மீடியாவில் இப்படி ஒவ்வொருவரை பற்றியும் கமெண்ட் போடுபவர்கள்தான். லீமா ரோஸ் என் கூட பிறந்த அக்கா மாதிரி. 20 வருட குடும்ப நண்பர். முதலில் நாங்கள் நண்பர்கள், அப்புறம்தான் கட்சிக்குள் வந்தோம்.

    அவர் என்ன கெடுதல் செய்தார்? அவரது தொழிலை வைத்து விமர்சிப்பது முறையல்ல. டாஸ்மாக்கும்தான் உயிரை கொல்லும் தொழில். நீங்கள் குடிப்பதால் தான் நிறைய கடைகளை வைத்துள்ளார்கள். அதை மூடினால் பாலக்காடு அல்லது வேறு ஊர்களுக்கு சென்று குடிக்க செல்ல மாட்டார்களா? லீமா ரோஸ் பல பேருக்கு உதவி செய்துள்ளார். பலரை பணக்காரர்களாக மாற்றியிருக்கிறார். நான் கட்சிக்காக ஓடி ஓடி உழைத்துள்ளேன். தலைவர் காலில் விழுந்து பதவி பெற முடியும். ஆனால் உழைப்பிற்கான அங்கீகாரம் தானாக வர வேண்டும்.

    Advertisement

    தி.மு.க சாதி, மதம் பார்க்காத அனைவரையும் அரவணைத்து செல்லும் கட்சி. ஆனால் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதியை தவிர வேறு யாருக்கும் இடமே இருக்காது. ஒரு சாதிக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. நான் எந்த சாதிக்கும் எதிரானவள் அல்ல. நான் கட்சி மாறவில்லை. ஆனால் நீங்கள் பேசுவதை பார்க்கும்போது, கட்சி மாறலாம் என தோன்றுகிறது.

    நான் கட்சி பணத்தில் 10 பைசா அனுபவிக்கவில்லை. செலவுதான் செய்துள்ளோம். திறமையில்லாதவர்களை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். கைக்கு அடக்கமான வாய் பேசாதவர்களுக்கு தான் பொறுப்பு தருகிறார்கள். ஒரு கம்பெனி வளர வேண்டுமென்றால் திறமையானவர்கள் இருக்க வேண்டும். அதுபோல கட்சி வளரவும் திறமையானவர்கள் இருக்க வேண்டும்." எனப் பேசியிருந்தார்.

    Advertisement

    யார் இந்த மீனா ஜெயக்குமார்?

    கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனா ஜெயக்குமார். அப்பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். திமுக மகளிரணி துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் மீனா ஜெயக்குமார் என முன்பு அவரது பெயர் பரவலாக பேசப்பட்டது. அவருக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இதையடுத்து மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டு, திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் மீனா ஜெயக்குமார். சட்டசபை தேர்தலிலும் சீட் கேட்டு, வேட்பாளர் நேர்காணலிலும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் மீனா ஜெயக்குமார்.

    English Summary

    Meena Jayakumar, a DMK functionary from Coimbatore, has caused a stir by announcing her resignation from the party. Her decision to quit—coming in the wake of the DMK's defeat in the recently concluded Assembly elections and amidst growing internal unrest within the party—has created a sensation within the Coimbatore district DMK unit.