கீர்த்தனாவின் சிரிப்பு முதல் கனிமொழி அறை சோபா வரை.. வந்ததுமே திணறடித்த தமிழக பெண் அரசியல்வாதிகள்

  • சென்னை:தமிழக பெண் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். கோவை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஜோதிட அலுவலகத்தில் நடத்திய ஆய்வுக் கூட்டம், தவெகவினரின் அதிகார வரம்பு மீறல் குறித்த விவாதத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளது. இப்போது அமைச்சர் கீர்த்தனாவின் சர்ச்சை என தவெக மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறார்கள்.. மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள், குறுகிய காலத்திலேயே தங்களின் பிரதிநிதிகள் இப்படி நடந்துகொள்வதைக் கண்டு கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். என்ன நடக்கிறது?

    Advertisement

    கோவை கவுண்டம்பாளையம் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், அரசு அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆய்வுக்கூட்டம் நடத்திய இடம்தான், முதல் விவாதப் பொருளாக உருவெடுத்தது.

    Advertisement

    ஒரு அரசு அலுவலகத்தில் நடக்க வேண்டிய கூட்டத்தை, ஏன் சொந்த ஜோதிட அலுவலகத்தில் நடத்த வேண்டும்? அந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியானபோது, மக்கள் கொதித்து போனார்கள்.

    கவுண்டம்பாளையம் கனிமொழி

    அந்த சிம்மாசன சோபாவில் கனிமொழி உட்கார்ந்திருக்க, அதிகாரிகள் சாதாரண நாற்காலிகளில் அமர்ந்திருந்தது பார்ப்பதற்கே மிக மோசமாக இருந்தது. ஆபீஸ் இன்னும் தயாராகவில்லை என்று கனிமொழி விளக்கம் கொடுத்தாலும், அரசு அதிகாரிகளின் கண்ணியத்தை மதிக்கத் தெரியாத ஒருவரிடம் எதை எதிர்பார்க்க முடியும் என்று பொதுமக்கள் கேட்கும் கேள்வி நியாயமானதுதானே?

    இதன் சூடு தணியும் முன்பேயே, அதாவது மறுநாளே ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனந்த் மோகன் செய்த காரியம் அதிகார வரம்பை மீறிய செயலாக பார்க்கப்பட்டது.

    Advertisement

    டாஸ்மாக் கடையில் பஞ்சாயத்து செய்தவரைப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதியை தனது முகாம் அலுவலகத்திற்கு வரச் சொல்லி, மாவட்ட ஃபைல்களை எடுத்து வரச் சொன்னதுதான் எல்லாவற்றையும் விட உச்சம்.

    எம்எல்ஏ டூ கலெக்டர்

    இதை கொஞ்சமும் எதிர்பாராத எஸ்பி, "எம்.எல்.ஏ.வை நான் ஏன் சந்திக்க வேண்டும்? அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?" என்று ஆட்சியரிடம் கொதித்துப் போய் புகார் அளித்தார். இவ்வளவு பெரிய தவறு நடந்த பிறகும், "தெரியாமல் செய்துவிட்டேன்" என்று அவர் மன்னிப்பு கேட்டதாக சொல்கிறார்கள்.

    எனினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், கட்சியே கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று அரசியல் வட்டாரங்களில் இப்போதே பேச்சுகள் அடிபடத் தொடங்கிவிட்டன.

    Advertisement

    இப்போது கோவை சிறுமி கொடூரமாகக் கொல்லப்பட்ட அந்த பயங்கரமான சம்பவத்தின் அதிர்ச்சியில் பொதுமக்கள் உறைந்துள்ளனர்.. இந்த துயரமான நிகழ்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அமைச்சர் கீர்த்தனா சிரித்துக்கொண்டே பதில் சொன்னாராம்..

    சிரித்து கொண்டே பதில்

    இந்த வீடியோவும் இணையத்தில் தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.. இந்த வீடியோ வெளியான பிறகு, சமூக வலைதளங்களில் அமைச்சர் மீது கடும் விமர்சனங்கள் வெடித்தன. அந்தச் சிறுமியின் உயிரிழப்பே அந்த ஊரை உலுக்கி எடுத்துக்கொண்டிருக்க, அமைச்சர் இப்படிச் சிரித்துக்கொண்டு பதில் சொன்னது எந்த வகையில் நியாயம்? என்று இணையத்தில் கமெண்ட்கள் விழுந்து கொண்டிருக்கின்றன.

    Advertisement

    எனினும் தன்னுடைய சிரிப்பு குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அமைச்சர் கீர்த்தனா, உணர்வுப்பூர்வமான சூழலில் இது வெறும் தற்செயலான தருணம் என்றும், உண்மைகளைத் திரித்துத் தனிப்பட்ட தாக்குதல்களை முன்னெடுப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல என்றும் ட்வீட் பதிவிட்டு விளக்கம் தந்துள்ளார்..

    தவெக அமைச்சர், எம்எல்ஏக்கள் என சம்பந்தப்பட்டவர்கள் தங்களது விளக்கத்தையும், பதிலையும் தெரிவிக்கிறார்கள் என்றாலும், குறுகிய காலத்தில் இப்படியான சர்ச்சைகள் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது..

    தலைமை என்ன செய்ய போகிறது

    ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்த மக்கள் பிரதிநிதிகள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல், ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு குழப்பத்தை உருவாக்கிக்கொண்டே இருப்பதாக ஒரு தரப்பினர் கருத்து கூறி வருகிறார்கள்.

    Advertisement

    என்னதான் அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாலும், களத்தில் இருக்கும் பிரதிநிதிகள் இப்படி நடந்துகொள்வதுதான் ஒட்டுமொத்த நிர்வாகத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. இவர்களைக் கட்டுப்படுத்த கட்சி மேலிடம் என்ன செய்யப்போகிறது? அல்லது இந்த அதிகார போதையில் இவர்கள் இப்படித்தான் தொடர்ந்து பயணிக்கப் போகிறார்களா? இதற்கான பதிலை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    From Coimbatore Kanimozhi’s Sofa to Keerthana’s Smile.. What’s Really Happening Inside TVK?