அடுத்தடுத்து ஆப்பு வைத்த மோடி அரசு! கூனிக்குறுகுது கோவை! புண்படுத்திகிட்டே இருக்கீங்களே! என்னாச்சு?

  • கோவை: தமிழகத்தின் தொழில் தலைநகரமாக அறியப்படும் கோவை மாவட்டம் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தொழில் துறையினர் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மூலப்பொருள் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த தொழில் துறைக்கு தற்போது எரிபொருள் விலை உயர்வும், டீசல் விநியோக கட்டுப்பாடும் புதிய சவாலாக உருவாகியுள்ளது.

    Advertisement

    கோவை மாவட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மையமாக விளங்கி வருகிறது. பம்ப் உற்பத்தி, மோட்டார் தயாரிப்பு, இயந்திர உதிரிபாகங்கள், ஜவுளி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றன.

    Advertisement

    ஆனால் கடந்த சில மாதங்களாக சர்வதேச சூழ்நிலைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் கோவை தொழில் துறையையும் நேரடியாக பாதித்துள்ளது. இந்நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கோவை தொழில் துறை

    அதன் தாக்கமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் லிட்டருக்கு ரூ.9 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு போக்குவரத்து செலவுகளை நேரடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்பு பொருட்களை அனுப்புவதற்கான செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே தொழிற்சாலைகளுக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக்கூடாது என்ற புதிய கட்டுப்பாடு தொழில் நிறுவனங்களை கவலையடைய வைத்துள்ளது.

    Advertisement

    எரிபொருள் விலை உயர்வு

    குறிப்பாக டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் டீசல் அடிப்படையிலான இயந்திரங்களை பயன்படுத்தி செயல்படும் தொழிற்சாலைகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. பெரிய தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், அவற்றை சார்ந்து இயங்கும் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தொழில் அமைப்புகள் எச்சரிக்கின்றன. எரிபொருள் விலை உயர்வின் தாக்கமாக சரக்கு வாகனங்களின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

    குறு சிறு தொழில்

    இன்று முதல் லாரி மற்றும் சரக்கு வாகன கட்டணங்கள் சுமார் 15 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மூலப்பொருட்களை வாங்குவதற்கும், தயாரிப்பு பொருட்களை விற்பனை சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்த கூடுதல் செலவு இறுதியில் பொருட்களின் விலையிலும் பிரதிபலிக்கும் என்பதால், தொழில் நிறுவனங்களும் நுகர்வோர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    டீசல் கட்டுப்பாடு

    டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வுடன் சேர்ந்து வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடும் தொழில் துறைக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. சில தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் தேவையான சிலிண்டர்களை பெற முடியாமல் தவித்து வருகின்றன. கிடைக்கும் சிலிண்டர்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொழில்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். வெளிச்சந்தையில் ஒரு சிலிண்டருக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், இந்த செலவில் தொழில் நடத்துவது சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    உற்பத்தி குறைவு

    தொழில் உற்பத்தி குறையும் சூழல் ஏற்பட்டால் அதன் நேரடி தாக்கம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பில் இருக்கும் என்று தொழில் அமைப்புகள் எச்சரிக்கின்றன. ஏற்கனவே பல நிறுவனங்கள் குறைந்த உற்பத்தி திறனில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடுதல் செலவுகள் காரணமாக சில நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொழில் துறையினர் தற்போது எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய பிரச்சினை வங்கி கடன்கள் ஆகும்.

    Advertisement

    பெரிய பாதிப்பு

    உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் வருமானம் குறைந்து வருவதால், பல தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை செலுத்துவதில் சிரமத்தை சந்தித்து வருகின்றன. வட்டி சலுகைகள் அல்லது தற்காலிக நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொழில் அமைப்புகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. ஆனால் இதுவரை அதற்கான தெளிவான அறிவிப்புகள் வெளியாகவில்லை. கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் சம்மேளன நிர்வாகிகள், தற்போதைய நிலை நீடித்தால் தொழில் துறையில் பெரிய பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

    English Summary

    Rising fuel costs, diesel restrictions and LPG shortages deepen pressure on Coimbatore's MSME sector and industrial growth.