பாலக்காடு- கோவை எல்லையில் கஞ்சா தோட்டம்.. அறுவடைக்கே ரெடியா.. ஆடிப்போன அதிகாரிகள்

  • கோவை: கேரளா-தமிழ்நாடு எல்லையையொட்டிய அட்டப்பாடி வனப்பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்ததாகக் கூறப்படும் 1,566 கஞ்சா செடிகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. 'ஆபரேஷன் தண்டர்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாலக்காடு கலால் துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    Advertisement

    பாலக்காடு மாவட்டம் அகளி கலால் சரக அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், உதவி கலால் ஆய்வாளர் ராஜேஷ் எம். தலைமையிலான குழுவினர் நேற்று (18.09.2026) அதிகாலை 5 மணியளவில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். பாலக்காடு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் அட்டப்பாடி வனச்சரகத்தின் முக்காலி வன நிலையக் குழுவினரும் இந்த நடவடிக்கையில் இணைந்தனர்.

    Advertisement

    அட்டப்பாடி பழங்குடியினர் தாலுக்காவுக்கு உட்பட்ட கடுக்குமன்னா பகுதியில், கடுக்குமன்னா சிகரத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, வனப்பகுதிக்குள் ஆறு வெவ்வேறு இடங்களில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 1,566 கஞ்சா செடிகள் அங்கு வளர்க்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கஞ்சா செடிகளில் சிலவற்றை அதிகாரிகள் மாதிரி பரிசோதனைக்காக சேகரித்து எடுத்துச் சென்றனர். எஞ்சியிருந்த செடிகள் அனைத்தும் சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டன. அட்டப்பாடி வனப்பகுதிகள் மற்றும் தமிழ்நாடு எல்லையோரப் பகுதிகளில் கஞ்சாவை வணிக மற்றும் தொழில்துறை அளவில் சட்டவிரோதமாக பயிரிட்டு வருபவர்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சாகுபடியின் பின்னணியில் யார் உள்ளனர், வனப்பகுதியில் எந்த வழியாக கஞ்சா சாகுபடி மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    இந்த நடவடிக்கையில் உதவி கலால் ஆய்வாளர் (தரம்) விசு ஜோசப், தடுப்பு அலுவலர்கள் சமோத், பிரமோத், சந்திரன், குடிமை கலால் அலுவலர்கள் விஷ்ணு, ராஜேஷ், போஜன் ஆகியோர் பங்கேற்றனர்.மேலும், முக்காலி வனச்சரகத்தைச் சேர்ந்த பீட் வன அலுவலர்கள் விபினா, இம்ரான் கான், விஸ்மயா, வன பீட் உதவியாளர் வெள்ளங்கிரி, என்.எம்.ஆர். வாட்சர்கள் மணி மற்றும் ரங்கன் உள்ளிட்டோரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அட்டப்பாடி உள்ளிட்ட கேரளாவின் வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா சாகுபடி செய்வதைத் தடுக்க கலால் துறை மற்றும் வனத்துறை சார்பில் தொடர் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஒரே நடவடிக்கையில் 1,566 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    A total of 1,566 cannabis plants, reportedly ready for harvest, were discovered and destroyed in the Attappadi forest area near Palakkad, along the Kerala-Tamil Nadu border.