கோவை: இந்தியாவின் எடிசன் எனப் போற்றப்படும் ஜி.டி. நாயுடு ஒரு முக்கியமான தொழில்முனைவோர், பல புதிய விஷயங்களை கண்டுபிடித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரை பற்றி பலரும் அதிகம் அறியப்படாத அத்தியாயம் ஒன்று இருக்கிறது. அதாவது அவர் தமிழரின் பண்டைய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் 40 ஆண்டுகள் தீவிர ஆய்வை மேற்கொண்டார்.
இந்தியாவுக்கான முதல் மின்மோட்டாரை உள்நாட்டிலேயே உருவாக்கிய தொழிலதிபர், புகழ்பெற்ற பேருந்து போக்குவரத்து நிறுவனத்தை ஆரம்பித்தவர், சர் சி.வி. ராமனையே வியக்க வைத்த தாவரவியல் சாதனைகளை நிகழ்த்தியவர் என்றே ஜி.டி. நாயுடுவை உலகம் அறிந்துள்ளது.
ஆனால், இதே நபர் தனது வாழ்க்கையில் சுமார் 40 ஆண்டுகள் தமிழரின் பண்டைய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தை ஆய்வு செய்து, அதில் மருந்துகளைத் தயாரித்து, அவற்றை ஆவணப்படுத்தியும் வந்துள்ளார். இது பற்றி மிகச் சிலருக்கே தெரியும். அவரது சித்த மருத்துவ ஆய்வு பலருக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது. சித்த மருத்துவம் என்பது இந்தியாவின் மிக பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டை சேர்ந்த இந்த மருத்துவ முறையில்.. தலைமுறை தலைமுறையாக ஓலைச்சுவடிகளில் தான் பரம்பரையாக மருந்துகளின் மூலிகைகள் குறித்த விவரங்கள் இருக்கும். ஜி.டி. நாயுடு காலத்தில் நல்ல படித்த இந்தியர்களும் கூட சித்த மருத்துவம் குறித்து ஆய்வுசெய்யவில்லை. அதை அவர்கள் பாரம்பரிய நாட்டுப்புற மருத்துவமாகவே தோன்றியது. ஆனால், ஜி.டி. நாயுடு அதை ஏற்க மறுத்தார். ஒரு கார்புரேட்டரையோ அல்லது மின்மோட்டாரையோ ஆய்வு செய்ததை போலவே சித்த மருத்துவத்தையும் அவர் அணுகினார். தகவல்களைச் சேகரித்தார், சோதனை செய்தார், அனைத்தையும் ஆவணப்படுத்தினார்.. இறுதியில் எவை எல்லாம் வேலை செய்ததோ அதை மட்டுமே ஏற்றுக்கொண்டார். இதற்கு கோவையில் செயல்பட்ட சித்த ஆராய்ச்சி ஆய்வகம் தான் மையமாக இருந்தது. இந்த ஆய்வகத்தை தோற்றுவித்தவரும் இயக்குநரும் டாக்டர் ஜி.டி. நாயுடு தான் என்பது அதிலேயே குறிப்பிட்டு இருக்கும். புகழ்பெற்ற சித்த மருத்துவர் டாக்டர் எம். சண்முகவேலுவுடன் இணைந்து, பண்டைய சித்த ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதிகள் மற்றும் பாரம்பரிய வைத்தியர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மருந்து முறைகளை ஒரே இடத்தில் தயாரித்து, பரிசோதித்து, பதிவு செய்யும் ஆய்வு மையமாக இந்த ஆய்வகத்தை ஜி.டி. நாயுடு மாற்றினார். அந்த ஆராய்ச்சியின் பலன்கள் இன்றும் கிடைக்கின்றன. ஜி.டி. நாயுடு மறைவதற்கு முந்தைய ஆண்டான 1973ல், சித்த ஆராய்ச்சி ஆய்வகம் சார்பில் "சித்தா ரிசர்ச் பார்மகோப்பியா" என்ற நூல் வெளியிட்டது. டாக்டர் எம். சண்முகவேலு எழுதிய இந்த நூல், சித்த மருத்துவ முறையின் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இதில் 14 அத்தியாயங்களில் 550க்கும் மேற்பட்ட மருந்துகள் குறித்த விவரங்கள் உள்ளன. மேலும், தனியான 15வது அத்தியாயத்தில் 251 குறிப்பிட்ட மருந்துகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேகரிக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, அந்த முடிவின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டவை என்பதையும் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த புத்தகம் இப்போது அச்சு வடிவிலும் உள்ளது. டிஜிட்டல் காப்பகங்களிலும் கிடைக்கிறது. இன்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த புத்தகம் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஜி.டி. நாயுடுவுக்கு மருத்துவ துறையில் இருந்த ஆர்வம் உலக நாடுகளுக்கும் சென்றடைந்தன. குறிப்பாக, 1950களின் இறுதியில் அவர் ஜெர்மனியில் தங்கியிருந்தபோது, நீரிழிவு, லியூகோரியா ஆகிய நோய்களுக்கு அவர் கண்டுபிடித்த மருந்துகள் குறித்து செய்திகளை உள்ளூர் செய்தித்தாள்கள் வெளியிட்டன. நீண்டகால ஆய்வுகளுக்குப் பிறகு மூலிகைகள் மற்றும் உலோக பொருட்களை இணைக்கும் சித்த மருத்துவத்தின் பாரம்பரிய முறையை அவர் வெற்றிகரமாக பயன்படுத்தியதாக 1957ஆம் ஆண்டு வெளியான Esslinger Zeitung குறிப்பிட்டது. அவரது சிகிச்சையால் சில மாதங்களிலேயே நீரிழிவு நோயாளிகள் நிவாரணம் பெற்றதாகவும், ஆயிரம் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த ஆய்வுகளுக்குப் பின்னால் இருந்த மருத்துவமும் கூட அதில் விளக்கப்பட்டு இருந்தது. இந்தியாவுக்கு திரும்பும் முன்பு எஸ்லிங்கனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜி.டி. நாயுடு, "இந்தியாவில் மட்டுமே அறியப்படும் மருந்து முறைகளை கற்க ஜெர்மனியின் இளம் மருத்துவர்கள் இந்தியா வர வேண்டும்" என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்திய பாரம்பரிய மருத்தும் சர்வதேச அளவில் மதிப்புடன் அணுக வேண்டும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் வலியுறுத்தியிருந்தார். மருத்துவ துறையில் ஜி.டி. நாயுடுவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க அங்கீகாரங்களில் ஒன்று, அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசர் வழங்கிய பாராட்டு கடிதமாகும். கோவையில் உள்ள ஜி.டி. நாயுடு அருங்காட்சியக காப்பகங்களில் இந்த கடிதம் இருக்கிறது. புற்றுநோய் ஆராய்ச்சித் துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றான பைசர், கோவையில் உள்ள சித்த மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றிய அவரது பணிகளை பாராட்டியது.. ஜிடி நாயுடுவின் மருத்துவ ஆய்வுகள் எந்த அளவுக்கு சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தன என்பதற்கான சான்றாக இது கருதப்படுகிறது. இங்கு ஒரு விஷயத்தை தெளிவாகக் குறிப்பிட வேண்டியது அவசியம். ஜி.டி. நாயுடு, நவீன மருத்துவத்தில் தன்னை மருத்துவராக ஒருபோதும் கூறிக்கொள்ளவில்லை. அவரது சிகிச்சை முறைகளும் மருந்துகளும் சித்த மருத்துவ மரபை சேர்ந்தவை. அவை எல்லாம் இன்று செட் ஆகுமா என்பதை சோதிக்க வேண்டியது இன்றைய தலைமுறையின் பொறுப்பாகும். ஆனால், அதற்காக அவர் செய்த முயற்சிகளை நம்மால் புறம் தள்ளிவிட முடியாது. 40 ஆண்டுகள் கஷ்டப்பட்டு, 800க்கும் மேற்பட்ட விஷயங்களை அவர் ஆவணப்படுத்தி இருக்கிறார். இது இந்த துறையில் அவர் காட்டிய அர்ப்பணிப்பை காட்டுகிறது. சித்த மருத்துவத்தில் ஜி.டி. நாயுடு மேற்கொண்ட பணிகள் அவரை முழுமையாக்குகின்றன. இந்தியா தனது சொந்த மின்மோட்டார்கள், ரேடியோக்கள் மற்றும் கடிகாரங்களைத் தயாரிக்க முடியும் என்று நம்பிய அதே மனிதர், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ அறிவு மரியாதையை பெற வேண்டும் என்றும் உறுதியாக நம்பினார். 1973-ல் அவர் விட்டுச் சென்ற அந்த புத்தகம் 50 ஆண்டுகளுக்கு பிறகும், சித்தர்கள் அறிந்த அறிவை ஆராய விரும்புவோருக்கு இலவசமாகக் கிடைக்கிறது.சித்த மருத்துவம்
ஆய்வகம்
விரிவான தகவல்கள்
ஜிடி நாயுடு
கவனிக்க வேண்டியது