மீன்காரருடன் புதைக்கப்பட்ட தங்க மீன் டாலர்.. கோவை சுடுகாட்டில் சொந்தக்காரரின் நரிவேலை! பகீர் பின்னணி

  • கோவை: கோவை மீன் வியாபாரி நாகராஜ், 'தங்க மீன் டாலர்' செயினை கழுத்தில் எப்போதும் அணிந்திருப்பாராம்.. அது 3 சவரன் தங்கம் என்று தெரிகிறது.. இந்த டாலர் மீது சொந்தக்காரர் ஒருவர் குறி வைத்துவிட்டார்.. அதற்காக அவர் செய்த காரியம்தான் பலரையும் பதற வைத்து விட்டது.. இதுகுறித்து போலீசாரும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவில் சுடுகாட்டில் அப்படி என்ன நடந்தது தெரியுமா?

    Advertisement

    கோவை சவுரிபாளையம் உடையாம்பாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் நாகராஜ்... 60 வயதான இவர், ஒரு மீன் வியாபாரி ஆவார்.. கடந்த 6-ம் தேதி உடல்நலக்குறைவால் நாகராஜ் உயிரிழந்து விட்டார்.

    Advertisement

    கோவை மீன் வியாபாரி நாகராஜ்

    இதையடுத்து, அவரது உடலை சவுரிபாளையத்தில் உள்ள சுடுகாட்டில் உறவினர்கள் அடக்கம் செய்தனர். அப்போது நாகராஜ் ஆசையாக அணிந்திருந்த மீன் டாலர் போட்ட 3 பவுன் தங்க செயினையும் அவரது உடலுடனேயே சேர்த்து புதைத்துவிட்டனர்.

    இந்நிலையில், நாகராஜின் காரிய சடங்கு செய்வதற்காக, புதைக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய அவரது மகன் 32 வயதான வெங்கடேஷ் குமார் மற்றும் உறவினர்கள் கடந்த 19ம் தேதி சுடுகாட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.. அப்போதுதான் அந்த காட்சியை கண்டு ஆடிப்போய்விட்டார்கள்..

    கழுத்தில் 3 பவுன் தங்க மீன் டாலர்

    அதாவது நாகராஜின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மண் சிதறி கிடந்துள்ளது.. குழி சரியாக மூடப்படாமல் அரைகுறையாக திறந்து கிடந்துள்ளது.. அத்துடன் அங்கே பயங்கர துர்நாற்றமும் வீசியிருக்கிறது.. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், சுடுகாட்டைப் பராமரித்து வரும் கார்த்திகேயன் என்பவரிடம் இதை பற்றி விசாரித்தனர்.

    Advertisement

    முதலில் முன்னுக்குப் பின் முரணாக பேசி மழுப்பிய கார்த்திகேயன், பிறகு உண்மையை ஒப்புக்கொண்டார். கடந்த 16-ம் தேதி, நாகராஜின் உறவினரான 35 வயது சக்திவேல் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 46 வயது மணிகண்டன் என்பவரை அழைத்து கொண்டு நள்ளிரவில் சுடுகாட்டுக்கு வந்தாராம்.. நாகராஜ் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி, நாகராஜின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினைத் திருடியிருக்கிறார்.. பிறகு அவசர அவசரமாக மறுபடியும் குழியை அரைகுறையாக மூடிவிட்டாராம்.

    சுடுகாட்டில் 3 பவுன் தங்கம்

    அதுமட்டுமல்ல, திருடிய தங்க சங்கிலியை ஆசிட் ஊற்றிக் கழுவி, அதனை உருக்கி, பூமார்க்கெட் பகுதியில் உள்ள தங்க நகை செய்பவர்களிடம் விற்றுள்ளார்.. அதில் கிடைத்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாயைக் கார்த்திகேயனுக்கு ஒரு ஷேர் தந்துள்ளார்.. இவ்வளவு விபரத்தையும் கேட்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ்குமார் உடனடியாகப் போலீசில் புகார் அளித்தார்.

    Advertisement

    புகாரின் பேரில், சக்திவேல், மணிகண்டன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கார்த்திகேயன் ஆகிய 3 பேர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இப்போது தலைமறைவாக இருக்கும் அந்த 3 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி கொண்டிருக்கிறார்கள்.

    3 பேர் அதிரடி கைது

    ஆனால், சுடுகாட்டில் சடலத்தைத் தோண்டி நகை திருடப்பட்ட விஷயம், ஊருக்குள் பரவிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் சிலர், குற்றவாளியான மணிகண்டனை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மணிகண்டன், தன்னைத் தாக்கியது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில், நாகராஜின் உறவினர்களான மணி, ரஞ்சித், கார்த்தி ஆகிய 3 பேர் மீதும் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Advertisement

    சுடுகாட்டை பராமரிப்பவருடன் சேர்ந்து சொந்தக்காரரே தங்க நகைக்காக சடலத்தை தோண்டி எடுத்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Gold Fish Dollar Buried with Fisherman? Relative’s Shocking Move at Coimbatore Cremation Ground Raises Questions