கோவை பெருமாள் முடி, மேல் முடி மலைக்கு செல்ல கட்டுப்பாடு.. ஆட்சியர் கறார் உத்தரவு

  • கோவை: கோவையை சுற்றி ஏராளமான மலைகள் உள்ளன. இது புரட்டாசி மாதம். புரட்டாசி சனிக்கிழமை மட்டும் பல்வேறு மலை கோயில்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில் ஆனைகட்டி பெருமாள் முடி, மேல் முடி கோயிலக்ளுக்கு ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். இந்நிலையில் வனவிலங்குகள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி அந்த மலை கோயில்களில் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலைக்கு மத்தியில் உள்ளது. வெள்ளியங்கிரி மலையில் ஒவ்வொரு ஆண்டு கோடை காலம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் வெள்ளியங்கிரி மலை செல்வார்கள். அப்போது சிலர் உடல்நல பாதிப்பால் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. உடல்நலம் பாதிப்புள்ளவர்கள் மலையேறும் போது பாதிக்கப்படுகிறார்கள்.

    Advertisement

    பெருமாள்முடி, மேல்முடிக்கு கட்டுப்பாடு

    அந்த வரிசையில் மேலும் சில மலைகள் இணைந்துள்ளன. தமிழக கேரளா எல்லையான ஆனைகட்டி மற்றும் பாலமலை பகுதியில் உள்ள பெருமாள் முடி, மேல்முடி கோயில்களுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் மட்டும் மலையேற பக்தர்கள் அனுமதிப்படுவார்கள். கடந்த ஆண்டும் அதிகளவு பக்தர்கள் சென்றனர். இந்த ஆண்டும் அளவுக்கு அதிகமான பக்தர்கள் மலையேற்றம் செய்கிறார்கள்.

    மேல்முடி மலையேறிய பக்தர்கள் ஒருவர் கடந்த வாரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அதிகளவு பக்தர்கள் மலையேறுவதால் வனம் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பெருமாள் முடி கோவிலுக்கு சனிக்கிழமை 1,000 பேர் செல்லவும் 250 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    ஆட்சியர் அறிவிப்பு

    அதேபோல மேல்முடி கோயிலுக்கு 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேல்முடிக்கு இனி புரட்டாசி சனிக்கிழமைகளில்
    150 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறியுள்ளனர். பெருமாள் முடி செல்லும் பக்தர்கள் மாங்கரை சோதனை சாவடியில் இருந்து புறப்பட வேண்டும், அதுபோல் மேல் முடி செல்லும் பக்தர்கள் பாலமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் இருந்து தான் கிளம்ப வேண்டும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், "வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருமாள்முடி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தடாகம் வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது. மேல்முடி மற்றும் பெருமாள்முடி செல்லும் பக்தர்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், தரிசனம் முடித்த பக்தர்கள் மாலை 4 மணிக்குள் அந்தந்த சோதனைச் சாவடியை வந்தடைய வேண்டும்.

    Advertisement

    பொருட்கள் தடை

    வாகனங்களின் நுழைவு எண்ணிக்கை அதிகபட்சம் 150 மட்டுமே (இதில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் இரண்டும் அடங்கும்). வனப்பகுதியை சுத்தம் செய்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்காக, ஒரு நபரிடமிருந்து ரூ.15/- பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கப்படும். சுகாதாரத்துறையினரால் முறையான உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன

    மேலும், பக்தர்களின் பாதுகாப்பையும், வனப்பகுதியின் இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பையும் உறுதி செய்ய பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இதனால் பெருமாள் முடி, மேல் முடி செல்லும் பக்தர்கள் முறையாக திட்டமிட்டு செல்ல வேண்டும்.

    English Summary

    Coimbatore District collector and Forest department ordered heavy restrictions on Perumal Mudi and Mel Mudi hills. They also released the guidelines.