இந்து முன்னணி தலைவர் கார் மீது மோதிய பைக்.. திருப்பூரிலும் மர்ம நபர்.. உளவுத்துறைக்கு போன கோரிக்கை

  • கோவை: கோவையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தின் கார் மீது பைக் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கூறப்படும் நிலையில், கோவை மற்றும் திருப்பூரில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களின் பின்னணியில் ஏதாவது சதித்திட்டம் உள்ளதா என விசாரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

    Advertisement

    இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நேற்று கோவையில் உள்ள அமைப்பின் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் மீது, பயங்கர வேகமாக வந்த பைக் ஒன்று, எதிர்பாராதவிதமாக மோதியது.

    Advertisement

    இந்து முன்னணி மாநிலத் தலைவர்

    இதைக் கண்ட அங்கிருந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உடனடியாக காட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பைக்கில் வந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    அப்போது, பைக்கில் வந்தவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் விகாஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கோவை நஞ்சப்பா சாலையில் முஸ்தபா என்பவருக்குச் சொந்தமான கடையில் பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து, இந்து முன்னணி நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் போலீசார் சிஎஸ்ஆர் பதிவு செய்தனர். மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க சம்பவம் நடந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    காடேஸ்வரா சுப்ரமணியம்

    காடேஸ்வரா சுப்ரமணியத்திற்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருப்பதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், அவரது கார் மீது பைக் மோதிய சம்பவம் நிகழ்ந்திருப்பது அமைப்பினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    "காடேஸ்வரா சுப்ரமணியத்திற்கு கொலை மிரட்டல் உள்ள நிலையில், இச்சம்பவம் நடந்து உள்ளது. இரு நாட்களுக்கு முன், திருப்பூரில் ஹிந்து முன்னணி அலுவலக மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது, மர்ம நபர் ஒருவர் ஏறினார். இந்த தொடர் சம்பவங்களை கருத்தில் கொண்டு, தமிழக உளவுப்பிரிவும், போலீசாரும் இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என விரிவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    Advertisement

    திருப்பூரிலும் மர்ம நபர்

    கோவையில் காடேஸ்வரா சுப்ரமணியத்தின் கார் மீது பைக் மோதிய சம்பவமும், 2 நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இந்து முன்னணி அலுவலகத்தின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது மர்ம நபர் ஒருவர் ஏறிய சம்பவமும் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன.

    அதனால் இந்த 2 சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் இந்து முன்னணியினர் எழுப்பியுள்ளனர். எனவே, இதனை சாதாரண சம்பவங்களாகக் கருதாமல் விரிவாக விசாரிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    உளவுத்துறைக்கு கோரிக்கை

    இந்த சம்பவங்களின் பின்னணியில் சதித்திட்டம் ஏதாவது உள்ளதா என்பதை தமிழக உளவுத்துறையும் காவல்துறையும் விசாரிக்க வேண்டும் என்று கிஷோர்குமார் வலியுறுத்தியுள்ளார். காடேஸ்வரா சுப்ரமணியத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    தற்போது கார் மீது பைக் மோதிய சம்பவத்தில் இருவர் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது விபத்தா அல்லது திட்டமிட்ட செயலா என்பது குறித்து விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், திருப்பூர் சம்பவத்துக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் காவல்துறை விசாரணைதான் தெளிவுபடுத்த வேண்டும்..!!

    English Summary

    Hindu Munnani Leader's Car Hit by Bike, Mystery Man in Tiruppur.. What Is the Intelligence Demand?