கோவை: தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா என்ன அரசியல் நிபுணரா. லாட்டரி விற்று கொண்டிருந்த ஒருவர். அவருக்கு என்ன பெயர், லாட்டரி மாஃபியா தானே? என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
சென்னைக்கு விமானம் மூலம் சென்ற அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழியனுப்பி வைத்தார். பின்னர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு ஆளும் கட்சியினர் மிரட்ட பார்க்கின்றனர். இந்த மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இது பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கு அஞ்சாது.
இதுபோன்ற பொய் வழக்குகளை சந்தித்துதான் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கத்தில் இருக்கிறோம். அதிமுக வெற்றியை தடுக்க இவர்கள் செய்கின்ற முயற்சி அனைத்தும் பொய்த்து போகும். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்கு அனுபவ குறைச்சல், பல கட்சி மாறி வந்தவர். இப்போது மந்திரி ஆகிவிட்டதால் அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அதிமுகவின் பாரம்பரியம் பெரியது. 55 ஆண்டை இந்த இயக்கம் எட்டி இருக்கிறது. இந்த இயக்கத்தை தொடக்கூட முடியாது. இவர்களின் அனுபவ குறைச்சலுக்காக ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கின்றனர். தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா போன்றவர்களின் கோமாளித்தனமான, வேடிக்கையான பேச்சுக்களுக்கு இந்த தேர்தல் முடிவுகள் சரியான பதில் கொடுக்கும். ஆதவ் அர்ஜூனா என்ன அரசியல் நிபுணரா?. அவர் எத்தனை ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறார்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அவர் லாட்டரி விற்றுக் கொண்டிருந்த ஒருவர். அவருக்கு என்ன பெயர். லாட்டரி மாஃபியா தானே?. தமிழகத்தில் தொடர் மின்வெட்டு மட்டுமல்ல, தொடர் கொலைகள் நடைபெறுகிறது. விதவிதமான கொலைகள், கொள்ளைகள் நடைபெறுகிறது. விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.அனுபவ குறைச்சல்
பிரகாசமான வெற்றிவாய்ப்பு
லாட்டரி மாஃபியா