கோயமுத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று (05.11.2026) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.
கோவை, சாடிவயல் பகுதியில் அமைந்து உள்ள கோவை குற்றாலம் அருவி, மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையடர்ந்த காடுகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அருவிக்கு வரும் நீரின் அளவு வழக்கத்தை விடப் பலமடங்கு அதிகரித்து, காட்டாற்று வெள்ளம் போல் ஆபத்தான முறையில் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீராடுவதோ அல்லது அருவிப் பகுதிக்குச் செல்வதோ பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், கோவை வனக்கோட்டம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (05/11/2026) தற்காலிகமாக மூடப்படுகிறது." எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலைப் பகுதிகளில் மழை நீடிக்கும் வரையும் மற்றும் அருவியில் நீர்வரத்து சீராகும் வரையும் சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர். நீர்வரத்து குறைந்த பின்னரே சூழல் சுற்றுலா மீண்டும் திறக்கப்பட்டுப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். திருவண்ணாமலை மகா தீபம்: திருக்கார்த்திகை நாளில் பக்தர்கள் மலை ஏற தடை.. கலெக்டர் அதிரடி உத்தரவு!