இதெல்லாம் சரிவராது.. கோயில் நிலம் பத்தி வெள்ளை அறிக்கை வெளியிடுங்க.. கிருஷ்ணசாமி

  • கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 2 மாதங்கள் உருண்டோடிவிட்டன. நேர்மையான ஆட்சி என்று கூறினாலும், தவெக அரசு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்நிலையில் பழனி கோயிலுக்கு சொந்தமான நிலம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

    Advertisement

    கோவையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தொகுதி மறுவரைவு தொடர்பான திருத்த மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவிகித அடிப்படையில் தொகுதிகள் உயர்த்தப்பட உள்ளதால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. எனவே இந்த மசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக வரவேற்க வேண்டும்.

    Advertisement

    தமிழகத்தில் கோயில் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுகின்றன. பழனி கோயிலுக்கு சொந்தமான சுமார் 1.4 ஏக்கர், ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நில பரிமாற்றத்தின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை முழுமையான விசாரணை நடத்த வேண்டும். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஆனால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

    தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான மொத்த நிலங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நில அபகரிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிப்பது ஆபத்தானது. சாதி, மதம் போன்ற விவரங்களை குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது. சேகரிக்கப்படும் தகவல்கள் எதிர்காலத்தில் தவறாக பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதால், அந்த நடைமுறையை கைவிட வேண்டும்.

    Advertisement

    கடந்த தேர்தலில் சுயமரியாதையை முன்னிறுத்தியே புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தவெக ஆட்சியின் 60 நாட்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. ஊழல் ஒழிப்பை மேல் மட்டத்திலிருந்தே தொடங்க வேண்டும். டாஸ்மாக் துறையிலும் மாற்றம் இல்லை. கூடுதல் கட்டண வசூல் தொடர்கிறது. கட்சி இன்னும் பயிற்சி நிலையிலேயே இருக்கிறது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. தவெகவின் வெள்ளை அறிக்கையில் புதிய தகவல்கள் எதுவுமில்லை.

    தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்திற்கான வருவாயை எப்படி அதிகரிக்க போகிறார்கள் என்பதை பட்ஜெட்டில் எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள். விஜய் அரசியல் வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக மற்றும் அதிமுக தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வர முடியாத நிலை மாறியுள்ளது. இயற்கையாக ஏற்படும் இடைத்தேர்தல்களை தவிர்க்க முடியாது. தமிழகத்தில் செயற்கையாக இடைத்தேர்தல்கள் உருவாக்கப்படுவது தவறான நடைமுறை என்றார்.

    English Summary

    The sale of land belonging to the Palani temple to a private party has caused shock. Krishnasamy has called for the release of a white paper regarding temple lands across Tamil Nadu.