லீமா ரோஸை சந்தித்த திமுக பெண் நிர்வாகி.. கடுகடுத்த உடன்பிறப்புகள்.. வீடியோ வெளியிட்டு குமுறல்

  • கோவை: சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. திமுக, அதிமுக 2 கட்சிகளிலும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளன. அதிமுக 2 ஆக பிரிந்துவிட்டது. வேலுமணி டீம் தவெக ஆதரவு முடிவை எடுத்தது. இதற்கு அந்தக் கட்சியில் சமீபத்தில் இணைந்து எம்எல்ஏ ஆகிய லீமா ரோஸ் மார்ட்டின் முக்கிய காரணம் என கூறப்பட்டது. லீமா ரோஸை, திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமார் கோவையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சையான நிலையில், திமுக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து மீனா வீடியோ வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    அதிமுகவில் நிலவும் பிரச்சனைக்கு லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் ஒரு முக்கிய காரணம் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் லீமா ரோஸை திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

    Advertisement

    அவர் தீவிரவாதியா

    இதுகுறித்து மீனா ஜெயக்குமார் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "என்னை சமூகவலைதளங்களில் போற்றி, தூற்றி விமர்சித்தவர்கள் அனைவருக்கும் வணக்கம். தொலைவில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது. ஒருவரின் சொந்த காரணங்களால் இவர்கள் இப்படித்தான் என்று முடிவுக்கு வரவேண்டாம். நாங்கள் என்ன கொலை குற்றமா செய்தோம். தீவிரவாதியையா பார்த்தோம்.

    எதிர்க்கட்சியாக இருந்தாலும் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது. இந்தக் கட்சி ஏன் தெரியுமா இப்படி ஆனது, சமூகவலைதளங்களில் இப்படி பேசுவோர் தான். என்னை விமர்சிப்போர் முதலில் அவரவர் வீடுகளில் திமுகவுக்கு தான் வாக்களித்துள்ளார்களா என்று கேளுங்கள். ஒரு பெண்ணை இப்படி விமர்சிக்கலாமா. நம் கட்சி என்று நான் இத்தனை நாள் பொறுமையாக இருந்தேன்.

    Advertisement

    உடன்பிறவா சகோதரி

    நான் கட்சிக்காக அவ்வளவு கடின உழைப்புகளை கொடுத்திருக்கிறேன். எந்த இடத்திலும் ஒரு ரூபாய் கூட யாரிடமும் வாங்க மாட்டேன். நினைத்திருந்தால் தலைவரிடம் பதவி வாங்க முடியும். என் உழைப்புக்கு பதவி கொடுத்தால் போதும். லீமாரோஸ் எனக்கு 20 வருட குடும்ப நண்பர். என் உடன்பிறவா சகோதரி. அவர் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார். அவரின் தொழிலை கொச்சைப்படுத்த வேண்டாம்.

    இங்கு டாஸ்மாக்கும் தான் பலரை கொல்கிறது. அதை எல்லோரும் விட்டுவிட்டார்களா. லீமாரோஸ் எவ்வளவு பேருக்கு நல்லது செய்கிறார்கள் தெரியுமா. பலர் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் அவரின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்று தெரியுமா. இதற்கு முன்பும் நான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து உள்ளிட்ட பல பதிவுகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளேன்.

    Advertisement

    உழைத்தவருக்கு பட்டம்

    நான் கட்சிக்காக பல கோடிகளை செலவு செய்துள்ளேன். கட்சி தோற்றதற்கு காரணமே திமுகவினர் தான். இங்கு ஜாதி பார்ப்பார்கள். கொங்கு மண்டலத்தில் வேறு ஜாதியினர் மேலே வர முடியாது. நான் கட்சி மாறவில்லை. ஆனால் இது என்னை யோசிக்க வைத்துள்ளது. நான் எந்த இடத்திலும் கட்சியை விட்டுக் கொடுத்ததில்லை. இவ்வளவு உழைத்தவருக்கு இப்படி ஒரு பட்டம் கொடுக்கிறார்கள்.

    நான் எந்த ஜாதிக்கும் எதிரானவள் இல்லை. வெற்றி வாய்ப்புள்ள பலர் தோற்றுள்ளனர். கைக்கு அடக்கமானவன், வாய் பேச முடியாதவனுக்கு மட்டும் தான் பதவி வழங்கினார்கள். ஏன் வாய் பேசுபவருக்கு ஏன் பதவி வழங்கவில்லை. என்னை கடுமையாக பேச வைக்காதீர்கள். நான் நம்பும் சக்தி உங்களை சும்மா விடாது" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Leema Rose: DMK State cadre Meena Jayakumar met ADMK MLA Leema rose spark controversy. Meena explain about the issue and condemned dmk members.