கோவை மாநகருக்குள் வந்த சிறுத்தை.. கோவில்பாளையத்தில் நம்பவே முடியாத சம்பவம்.. சிசிடிவி காட்சி

  • கோவை: கோவை மாநகரத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தான் உள்ளது என்றாலும், வனப்பகுதிக்கும் கோவை மாநகருக்கும் இடையில் மிகப்பெரிய தூரம் உள்ளது. கோவை மாநகரை ஒட்டியுள்ள பகுதிகளும் அப்படித்தான். ஆனாலும் கோவை மாநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தை, யானை, புலி போன்ற விலங்குகளின் நடமாட்டம் இருக்கிறது. அந்த வகையில் கோவை கோவில்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாடியுள்ளது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதை பார்த்து அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    Advertisement

    கோவை கோவில்பாளையம் பகுதி என்பது சரவணம்பட்டியை ஒட்டியுள்ள நகரப்பகுதியாகும். இது வனப்பகுதியை ஒட்டியுள்ள இடமில்லை.. எனினும் இங்கு கவுசிகா நதி ஓடுகிறது. மழை காலங்களை தவிர மற்ற நேரத்தில் இந்த நதி வறண்ட நிலையிலேயே இந்த கவுசிகா நதி இருக்கும். இந்நிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று , நீண்ட தூரம் கடந்து. கோவில்பாளையம் கவுசிகா நதிக்கரைக்கு வந்திருக்கிறது. அதன் பிறகு அருகிலுள்ள விவசாய தோட்டத்துக்குள் இரை தேடி சிறுத்தை சென்றுள்ளது. ஆனால் இரை எதுவும் கிடைக்காததால் சிறுத்தை அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இந்த நிலையில் கோவில்பாளையத்தில் உள்ள அந்த தோட்ட உரிமையாளர் நேற்று காலை தோட்டத்துக்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வழக்கம் போல பார்த்துள்ளார். அப்போது தான் அங்கு சிறுத்தை நடமாடிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வனத்துறைக்கு தகவல் அளித்தார்..

    இதன் அடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு தோட்டத்திற்கு சிறுத்தையின் காலடி தடம், கண்காணிப்பு கேமரா காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்தனர்.. அதன்பிறகு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்ட இடங்களிலும் விரிவாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த விவசாய தோட்டத்துக்குள் சிறுத்தை வந்து சென்ற காலடி தடங்களை கண்டறிந்தனர்

    Advertisement

    இதில் பொதுமக்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால், கோவில்பாளையம், வனப்பகுதியை விட்டு வெகு தொலைவில் அமைந்திருக்கிறது. அப்படியிருக்கும் போது சிறுத்தை எப்படி இங்கு வந்தது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கவுசிகா நதிக்கு அருகில் அடர்ந்த முட்காடுகள் உருவாகி புதர் மண்டிய கிடக்கிறது.. இதனால் அந்த பகுதிக்கு புள்ளிமான்கள், காட்டு பன்றிகள் ஆகியவை வந்து செல்வது வழக்கமாக இருக்கிறதாம். எனவே முட்புதருக்குள் நிற்கும் மான், பன்றிகளை வேட்டையாடுவதற்காக சிறுத்தை கோவில்பாளையத்துக்கு வந்திருக்கலாம் என்று வனத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

    இதற்கிடையே கோவில்பாளையம் தோட்ட பகுதியில் சிறுத்தை நடமாடிய தகவலை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள். வனப்பகுதி மற்றும் அதனையொட்டிய பகுதியில் தான் சிறுத்தைகள் வரும். ஆனால் கோவை நகர்ப்புறத்தை ஒட்டி உள்ள கோவில்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    English Summary

    A leopard was spotted in the Kovilpalayam area of ​​Coimbatore. This was recorded on a surveillance camera there.