உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிய சிக்கல்.. இனி என்ன செய்ய வேண்டும்?

  • கோவை: ஆசிரியர் பணிக்கும், பணி உயர்வுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. . கல்வித்தகுதிக்கும், தகுதிக்கும் வேறுபாடு இருக்க முடியாது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி (ஆர்.டி.இ.) தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரசு பள்ளி ஆசிரியர்கள் பலரும் உடனே தேர்வில் ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கும், பணி உயர்வுக்கும் தகுதித்தேர்வு கட்டாயமா? என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    Advertisement

    ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். கல்வித்தகுதிக்கும், தகுதிக்கும் வேறுபாடு இருக்க முடியாது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி (ஆர்.டி.இ.) தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.

    அதேநேரம் ஆர்.டி.இ. சட்டத்தில் இருந்து மொழிவாரி, மதவாரி சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு அளித்த பிராமதி தீர்ப்பில் சந்தேகம் உள்ளதால், இந்த விவகாரத்தை கூடுதல் அமர்வு விசாரிக்கும் வகையில் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடுகிறோம். அதுவரை அனைத்து பள்ளிகளும் ஆர்.டி.இ. சட்டத்தை ஏற்று நடக்க வேண்டும். இதன்படி, ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களும் தகுதித்தேர்வை எழுதி தகுதி பெற வேண்டும்.

    Advertisement

    ஆர்.டி.இ. சட்டம் வருவதற்கு முன்பு (அதாவது 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு முன்பு) 20 அல்லது 30 ஆண்டுகள் பணியில் உள்ளவர்களை தகுதித்தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது பொருத்தமாக இருக்காது என நினைக்கிறோம். இதற்காக உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பணிக்காலம் 5 ஆண்டுகள் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த தேர்வு எழுதி தகுதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் பணி உயர்வு பெற விரும்பினால் தகுதித்தேர்வை எழுதி தகுதி பெறாமல் இருந்தால் அவர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

    Advertisement

    ஆர்.டி.இ. சட்டம் அமலுக்கு வருவதற்கு முன் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலத்தை கொண்ட ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். இவ்வாறு தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணியிலிருந்து வெளியேற வேண்டும். அவர்கள் ஓய்வு பெற்றதாகக் கருதப்பட்டு, அவர்களுக்கான ஓய்வுகாலப் பயன்கள் அளிக்கப்பட வேண்டும். சில குறைபாடுகளால் தகுதித்தேர்வை எழுத முடியாத ஆசிரியர்களின் கோரிக்கையை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். ஆசிரியராக பணியில் சேர விரும்புவோரும், ஆசிரியர் பணியில் உயர்வை விரும்புவோரும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற உரிமை இல்லை" இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    Advertisement

    இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது மனுதாரர்கள் சார்பில், கட்டாய கல்வி உரிமை சட்டம் 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி அமலுக்கு வந்தது. அதற்கு முன் ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு இச்சட்டம் பின் தேதியிட்டு பொருந்தாது உள்ளிட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
    இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. அந்த தீர்ப்பில் கூறுகையில், "புதிதாக முன்வைக்கப்பட்ட அனைத்து வாதங்களும் நிராகரிக்கப்படுகின்றன. குழந்தைகளின் ஆரம்ப கல்வியின் முக்கியத்துவத்தை கருதி தகுதித்தேர்வு எழுத ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை தளர்த்துகிறோம். இதன்படி 2 ஆண்டுகளுக்கு பதிலாக 3 ஆண்டுகளுக்குள் அதாவது 2028-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இத்தகைய தகுதித்தேர்வை மாநில அரசுகள் விரைந்து நடத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தகுதித்தேர்வு எழுத இனியும் காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது" இவ்வாறு அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    Advertisement

    டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அவகாசத்தை 2028 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நம்பிக்கையளிக்கும் முக்கியமான முடிவாக இந்த தீர்ப்பு, பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும், மாணவர்களின் கல்வி நலனையும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.

    இந்த தீர்ப்பால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தேர்வில் வெற்றி பெறாவிட்டால், தமிழகத்தில் பல ஆசிரியர்கள் நீண்ட காலமாக பள்ளிகளில் பணியாற்றி வந்தாலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் அவர்களின் பணிநிலை, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள கால அவகாசத்தை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் நலனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்

    குறிப்பாக, டெட் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கான பாதுகாப்பை உறுதி செய்தல், அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் சிறப்பு பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல் ஆகிய நடவடிக்கைகள் அவசியம் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    The Supreme Court has refused to review its verdict making qualifying examinations mandatory for both teacher recruitment and promotions. This has created difficulties for government school teachers. Let us now examine what steps teachers should take moving forward.