8 பேர் அமைச்சரானால் எல்லாம் மாறிடுமா?.. அகிலன் விவகாரத்தில் அமைச்சர் வன்னியரசு காட்டம்

  • கோவை: இந்த சமூகம் சாதிய கட்டமைப்பு, சனாதான கட்டமைப்பு கொண்டது. அதை உடைக்க போராடி வருகின்றோம். எட்டு பேர் அமைச்சராக வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை. எல்லாம் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது என மாணவன் அகிலன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.

    Advertisement

    இதுகுறித்து அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் வழிகாட்டுதலின் அடிப்படையில் வந்துள்ளேன். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நேற்று எஸ்சி, எஸ்டி சட்டத்தின்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கின்றார். அகிலனுக்கு வீர வணக்கத்தை செலுத்தி இருக்கிறேன். நீதியரசர் சந்துரு அறிக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன்.

    Advertisement

    தப்பிக்க முடியாது

    பள்ளிகளில் நீண்ட காலமாக இருக்கின்ற சாதிய பாகுபாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை களைய எல்லா வேலையும் செய்ய வேண்டும். பள்ளிகளில் சாதிப்பெயர் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியமானது, முதன்மையானது. அதை எடுப்பதற்கான முயற்சிகளை செய்வோம். சிபிசிஐடி விசாணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. முழுமையான விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் இதில் யாரும் தப்பிக்க முடியாது.

    விரைந்து நடவடிக்கை

    எவ்வளவு பெரிய சாதி பின்புலம் இருந்தாலும் சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள். முதல் நாளில் இருந்து தோழர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். காவல் துறை அதிகாரிகளிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். சென்னையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக இருந்தது, நானும் அதைத்தான் வலியுறுத்தினேன்.

    Advertisement

    சிபிசிஐடி விசாரணையை தொடர்ந்து அனைத்து சந்தேகங்களும், பிரச்சனைகளும் தீர்த்து வைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குழப்பங்கள், தயக்கங்கள் இருப்பதால் முழுமையான விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. நான் அமைச்சராக இல்லை என்றால் இந்த போராட்ட களத்தில் இருப்பேன், போராட்டக் களம் என்பது நீதி பெறுவதற்கான இடம்.

    அகிலன் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம்.. சகோதரிக்கு அரசு வேலை.. ஆறுதல் கூறிய அமைச்சர் சம்பத்

    8 பேர் அமைச்சரானால்..

    நான் அமைச்சரவையில் இருக்கிறேன், அமைச்சரவைக்குள் இருந்து என்னென்ன முடியுமோ அதை செய்கிறேன். இதில் எந்த இடத்திலும் பின்னடைவு இல்லை. எஸ்சி, எஸ்டி சட்டப்படி வேலை வாய்ப்பு பெறப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் போராடுகின்றனர். ஏழு நாட்கள் போராட்டத்திலும் நாங்களும் இருக்கிறோம். எல்லா மாணவர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். பள்ளி, கல்லூரி வளாகங்களில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது முதன்மையானது.

    Advertisement

    இந்த சமூகம் சாதிய கட்டமைப்பு, சனாதான கட்டமைப்பு கொண்டது. அதை உடைக்க போராடி வருகின்றோம். 8 பேர் அமைச்சராக வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை, போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது. சாதிய அழுக்குகளை வேறறுக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்துத்துவத்தை வேரறுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சாதிய பாகுபாடு களைகின்ற வரை சமூக விடுதலைக்காக போராட வேண்டியிருக்கிறது என்றார்.

    English Summary

    Minister Vanniarasu paid tribute to deceased Coimbatore student Akilan and said those responsible would face legal action following the CBCID investigation, stressing the need to eradicate caste discrimination in schools.