Sulur Girl Murder: கோவை சூலூர் சிறுமி கொலை! நடந்தது என்ன? தாய் கண்ணீர் பேட்டி

  • கோவை: கோவை சூலூரில் மாயமான 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது உடல் கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவு செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடல் கிடைத்த இடத்தில் தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு நடத்தினார். இக்குற்றச்சம்பவம் தொடர்பாக இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

    Advertisement

    சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 10 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.

    Advertisement

    நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

    போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று இரவு சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையோர முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

    இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    சிறுமி மாயமான பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் சிறுமியைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகலில் கார்த்திக்கைப் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்குத் தான் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, கொடூரமாகக் கொலை செய்ததை கார்த்திக் ஒப்புக் கொண்டார்.

    மேலும், இந்த கொடூரக் கொலைச் சம்பவம் குறித்துத் தெரிந்திருந்தும், அதனை வெளியில் சொல்லாமல் மறைத்து குற்றவாளிக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் கண்டறிந்தனர்.

    Advertisement

    இதையடுத்து, இக்கொலையில் தொடர்புடைய முதன்மை குற்றவாளி கார்த்திக் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட கார்த்திக், போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது காலில் காயமடைந்ததால், அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மற்றொரு குற்றவாளியான மோகன்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவரை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பெற்று சிறையில் அடைத்தனர்.

    சிறுமி எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை (Post-mortem report) முழுமையாக வெளியான பிறகே தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் கூறியிருப்பதாவது: வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு மகள் சென்றாள். அங்கு அவளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து மகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

    என் மகளை அழைத்து சென்றவர், என் பக்கத்து வீட்டில் குடியிருந்துவிட்டு அண்மையில் காலி செய்தவர். சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அவர் எனது மகளை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

    கைது செய்யப்படும் வரை அவரும் சேர்ந்து எங்களுடன் மகளை தேடினார். மகளின் சாவுக்கு காரணமானவர்களுக்கு கொடூர தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என அந்த தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    English Summary

    A 10-year-old girl who went missing in Coimbatore’s Sulur was found dead, sending shockwaves across the region. Following the completion of the postmortem examination at Coimbatore ESI Hospital, the child’s body was handed over to her grieving parents.