கோவை: மின் கணக்கீடு செய்ய முடியாத மாதங்களில் முந்தைய தொகையையே செலுத்த சொல்லும் நடைமுறையை டேபிள் ஒர்க் என தவறாக சட்டசபையில் குறிப்பிட்ட அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கணக்கீட்டாளர்கள் மீது தவறு இருப்பதாக உண்மைக்கு புறம்பாக எழுதி கொடுத்த அதிகாரி மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கணக்கீட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழக மின்வாரியத்தில் 3.20 கோடி மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்புகள் தொடர்ந்து புதிதாக வழங்கப்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழக மின்வாரியத்தில் மொத்தம் 7,591 கணக்கீட்டாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. ஆனால் 1500 நபர்களே பணியாற்றி வருகிறார்கள், கிட்டதட்ட 6500 இடங்கள் காலியாக இருக்கின்றன. சில நேரங்களில் நிர்வாக காரணங்களால் கணக்கீடு செய்ய முடியாவிட்டால், முந்தைய மாதங்களில் செலுத்திய தொகையை கட்ட சொல்லி மின்வாரியம் அறிவிக்கும். இது போல் கடந்த காலங்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை காலங்களில் நிகழ்ந்துள்ளது. அது போல் மீட்டர் பழுதாகியிருந்தால் அது சரியாகும் வரை முந்தைய சராசரி கட்டணத்தை செலுத்த மின்வாரியம் கூறும். எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிட்டால் அடுத்தடுத்த மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். அண்மையில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மின் கட்டணம் அதிகமாக வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சின்னத்திரை நடிகை வைஷாலி தணிகா, தனது வீட்டிற்கு வழக்கத்தை விட அதிக அளவில் மின்கட்டணம் வந்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இவரை போல் பொதுமக்களும் பலர் குற்றம்சாட்டியிருந்தனர். அந்த வகையில் ஜூலையில் மீண்டும் ஆய்வு செய்ததில் 0.6 சதவீதம் மட்டுமே இது போன்ற குறைபாடு இருப்பது மின்வாரியத்தால் கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த காலங்களில் கணக்கீட்டாளர்கள் பணிக்கு செல்லாமல் டேபிள் ரீடிங் செய்து மின் கணக்கீடு செய்ததாக நிர்மல் குமார் குற்றம் சாட்டியிருந்தார். அது போல் தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கணக்கீடு சரியாக நடக்கிறது. பல மாதங்களாக கணக்கெடுக்காமல் கடந்த ஆட்சியில் இருந்ததால்தான் தற்போது மின்கட்டணம் உயர்ந்ததாக சட்டசபையில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருந்தார். இதற்கு பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தினர் கூறுகையில், மின்வாரியத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது. ஒரு வேளை அவ்வாறு முடியாத பட்சத்தில் முந்தைய தொகையையே செலுத்துமாறு அறிவிப்பு வெளியிடப்படும். இதை நாங்கள் previous month calculation என அழைப்போம். இதுதான் மின்வாரிய நடைமுறை. ஆனால் அமைச்சர் சொல்வதை போல் டேபிள் ரீடிங் என்றால், கணக்கீட்டு பணிக்கே செல்லாமல் அந்த கணக்கீட்டாளரே தோராயமாக ஒரு குறிப்பிட்ட யூனிட்டுகளை கணினியில் உள்ளீடு செய்வதாகும். எனவே அமைச்சர் பயன்படுத்திய டேபிள் ரீடிங் என்பது பிஎம்சி நடைமுறையிலிருந்து மாறுபடுகிறது. இந்த டேபிள் ரீடிங் என்பது தவறானது. அமைச்சருக்கு வித்தியாசம் தெரியாமல் அதிகாரிகள் எழுதி கொடுத்ததை சட்டசபையில் படித்தது கணக்கீட்டாளர்களுக்கு மனவேதனையை அளித்துள்ளது. கணக்கீட்டாளர் பணிக்கான ஆள் பற்றாக்குறையால்தான் பல இடங்களில் பிஎம்சி முறையில் மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வந்த யூனிட்டே ஏப்ரல், மே மாதங்களிலும் வரும் என எதிர்பார்க்கக் கூடாது. கோடை காலத்தில் மின் பயன்பாடு அதிகமாகவே இருக்கும். முந்தைய மாதங்களில் கணக்கீடு செய்யாததே காரணம் என சொல்லாமல் கணக்கீட்டாளர்கள் டேபிள் வொர்க் செய்ததாக அதிகாரிகள் சொன்னதை அப்படியே நிர்மல் குமார் பேசிவிட்டார். இது போல் ஆதாரமே இல்லாமல் கணக்கீட்டாளர்கள் மீது குற்றம்சாட்டிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்டசபையில் தவறான தகவல் அளித்ததற்கு நிர்மல் குமார் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று அந்த சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.