திமுக, அதிமுகவிற்கு விரைவில் ஆளே இல்லாத நிலை ஏற்படும்.. அமைச்சர் நிர்மல்குமார்

  • கோவை: முதல்வர் விஜய்யின் கரூர் பயணத்தை எதிர்த்து திமுக, அதிமுக தேவையற்ற அச்சத்தில் செயல்படுகின்றது என்று அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இரு கட்சிகளின் மனுக்களும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கரூர் பயணத்தை தடுக்க முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.

    Advertisement

    கோவை அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சரின் கரூர் பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் திமுக மற்றும் அதிமுகவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் கரூர் செல்வதைக் கண்டு எதிர்க்கட்சிகள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

    Advertisement

    எப்படியாவது முதலமைச்சரின் கரூர் பயணத்தைத் தடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிபிஐ விசாரணை குறித்துப் பேசும் இவர்கள், தங்களது ஆட்சிக் காலத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை கோரியவர்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை. தற்போது எப்.ஐ.ஆர் (FIR) கூட முழுமையாகப் படிக்காமல், உச்சநீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளனர்.

    திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் தமிழகத்தில் நாளுக்கு நாள் தேய்ந்து வருகின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில், வெறும் 10 முதல் 15 பேரைத் தவிர இந்த இரு கட்சிகளிலும் ஆட்களே இல்லாத நிலை ஏற்படும். அந்த அளவுக்குத் தமிழக மக்கள் அவர்களைப் புறக்கணித்து, எங்களை ஆதரித்து வருகிறார்கள்.

    Advertisement

    ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மக்களின் விருப்பத்தை ஏற்றே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. எங்களது கூட்டணியில் உள்ள திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் அனைத்தையும் கலந்து பேசி இணக்கமாகச் செயல்பட்டு வருகிறோம்.

    முதலமைச்சர் தலைமையில் விரைவில் அடுத்தகட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கூட்டணிக்கான பெயர் மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் ஆகியவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றார்.

    English Summary

    Minister Nirmalkumar has accused the DMK and AIADMK of acting out of unnecessary fear regarding Vijay's visit to Karur. He also criticized the attempts to block the trip to Karur, noting that the petitions filed by both parties had been dismissed by the court.