சென்னை: அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏ-க்களான எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் பக்கம் 13 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மீண்டும் எஸ்பி வேலுமணி தரப்பை நம்பி செல்ல முடியாது என்று சில எம்எல்ஏ-க்கள் கைவிரித்துவிட்டதால், அதிமுகவை சட்டரீதியாக கைப்பற்றும் முயற்சியில் எஸ்பி வேலுமணி இறங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தன. இதன்பின் எடப்பாடி பழனிசாமி தகுதி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, 6 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் நகர்ந்தனர். மீதமிருப்பவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சம் அடைந்தனர்.
தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்ததோடு, 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. இதன்பின் அதிருப்தியில் இருந்த எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சர் செங்கோட்டையனும் இன்னும் 15 எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு வரப் போகிறார்கள் என்று பேசி திரியை கொளுத்தினார். அதிமுக வசம் 41 எம்எல்ஏ-க்கள் இருக்கும் சூழலில், இரண்டில் ஒரு பங்கு எம்எல்ஏ-க்கள் என்றால், 28 பேர் தேவை. அப்போது தான் தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகாமல் தப்ப முடியும். ஆனால் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் பக்கம் வெறும் 13 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த முறை ஆதரவாக நின்றவர்களிடம் தொடர்பு கொண்ட போது, எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இன்னொரு பக்கம் அணி மாறுவதற்கு அதிமுக எம்எல்ஏ-க்களும் அதிகம் எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. அதனை யார் ஏற்பது என்ற கேள்வியும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து வந்த போது, சிலர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போதே எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் முறையாக அழைப்பை எடுக்கவில்லை. இதனால் மீண்டும் அவர்களை நம்பி செல்ல முடியாது என்று அதிமுக அதிருப்தி அணியில் இருந்த எம்எல்ஏ-க்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் அமைதியாகி அதிமுக வலுப்பெற வேண்டும் என்று பேசத் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. மேலும், அதிமுகவை சட்டரீதியாக கைப்பற்றும் முயற்சியில் எஸ்பி வேலுமணி இறங்கியுள்ளார். ஆனால் டெல்லியின் ஆதரவும் பூரணமாக கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.