கோயம்புத்தூர்: பெரியார் அறிவுலக நூலகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் நூல்கள் அனைத்தும், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழக அரசின் ஆட்சி நிர்வாகம் சென்ற பிறகுதான் வாங்கப்பட்டிருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
கோயம்புத்தூரில், கடந்த திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலக மையம் கட்ட தொடங்கப்பட்டது. தற்போது தவெக ஆட்சியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறந்து வைக்கப்பட்டன. ஆனால், இந்த அறிவுலக நூலகத்தில் உள்ள புத்தகங்கள் AI மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் விமர்சித்திருக்கிறார்.
'சிந்தை' தளத்தில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில், 'அகல் விளக்கு' என்கிற பதிப்பகம் பெயர் பொறிக்கப்பட்டு சுமார் 2,000 புத்தகங்கள் இருப்பதாகவும், இந்த புத்தகங்கள் அனைத்தும் AI மூலம் எழுதப்பட்ட போலியான புத்தகங்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த புத்தகங்களில், நாலடியார் சிறந்த கவிஞர் என்றும், கீழடியில் நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது எனவும் தவறாக எழுதப்பட்டிருக்கும் புத்தகங்களை உதாரணமாக எடுத்து கூறியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து.. பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். நூலகத்திற்கு புத்தகங்கள் எந்த காலத்தில் வாங்கப்பட்டவை? திமுக ஆட்சிக்காலத்திலா? அல்லது.. தவெக ஆட்சியிலா? என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி. எழுத்தாளர்கள் சிலர், இது குறித்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருக்கின்றனர். அதில், ஒரு சில புத்தகங்களுக்கு மார்ச் மாதம் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த புத்தகங்கள் மார்ச் மாதம் நூலகத்திற்கு வந்திருக்கின்றன. இப்படி வந்த புத்தகங்களின் விலை நியாயமானதாக இருந்துள்ளது. அதன் பதிப்பகத்தின் பெயர்களும் உண்மையானதாக இருந்துள்ளது. ஆனால், அதுவே ஜூன் மாதம் முத்திரையிட்ட புத்தகங்கள் அனைத்தும் 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் புத்தகங்களாகும். அப்படி ஒரு பதிப்பகமே இல்லாத நிலையில்.. எங்கிருந்து இந்த புத்தகங்கள் வாங்கப்பட்டன? என கேள்வி எழுந்திருக்கிறது. 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் 300 பக்கம் கொண்ட புத்தகங்களின் விலை ரூ.1400-1500 என அச்சிடப்பட்டிருக்கிறது. அதேபோல, உள்ளே உள்ள தகவல்கள் பொய்யானவையாக இருக்கின்றன. தேர்வுக்குழு புத்தகங்களை தேர்வு செய்து அனுப்பிய பின்னர்.. தேர்தல் அறிவிக்கப்பட்டதால், மாநில நிர்வாகம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருக்கிறது. அந்த கேப்பில்தான் 'அகல் விளக்கை' ஏற்றியிருக்கிறார்கள் என்று சில எழுத்தாளர்கள் விமர்சித்திருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும்.. எங்கு தவறு நடந்தது என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.