கணபதி, காளப்பட்டி, இருகூர்.. கோவை மாநகரத்தில் புதிதாக மூன்று காவல் நிலையங்கள் வருகிறது

  • கோவை: கோவை மாநகர காவல்துறையில் கூடுதலாக மூன்று காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டிருக்கிறது. சரவணம்பட்டி போலீஸ் நிலைய எல்லையில் இருந்து பிரித்து கணபதி, பீளமேட்டில் இருந்து பிரித்து காளப்பட்டி, சிங்காநல்லூரில் இருந்து பிரித்து இருகூர் ஆகிய 3 புதிய போலீஸ் நிலையங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    கோவை மாநகரம் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாநகரமாக இருக்கிறது. கோவை மாநகரம் மட்டுமின்றி, கோவையின் புறநகர் பகுதிகளும் சென்னையின் புறநகரை போல் நன்கு வளர்ந்து வருகின்றன. இதனால் கோவை மாநகரை தாண்டி கோவையின் புறநகரிலும் மக்கள் அடர்த்தி கடுமையாக உயர்ந்து வருகிறது.

    Advertisement

    இதன் காரணமாக பிரச்சனைளும் அதிகமாகி வருகிறது. அதற்கு ஏற்ப காவல்துறைநிர்வாகத்தையும் புதிததாக உருவாக்க வேண்டிய தேவையும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் துறையில் கடைவீதி, ஆர்.எஸ்.புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், வெரைட்டிஹால் ரோடு, சரவணம்பட்டி, செல்வபுரம், சாய் பாபாகாலனி, உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர், ரத்தினபுரி, கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை, வடவள்ளி, துடியலூர் ஆகிய 20 காவல் நிலையங்கள் உள்ளன.

    இதில் கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை ஆகிய 3 போலீஸ் நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வடவள்ளி, துடியலூர் மாவட்ட காவல்துறையிடம் இருந்து இணைக்கப்பட்டது. இந்த 5 போலீஸ் நிலையங்களை தவிர மீதமுள்ள 15 போலீஸ் நிலையங்களிலும் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு தனித்தனியாக இயங்கி வருகிறது.

    Advertisement

    கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை வடவள்ளி, துடியலூர் ஆகிய 5 போலீஸ் நிலையங்களிலும் சட்டம்-ஒழுங்கு போலீசார்தான் குற்ற புலனாய்வு பிரிவையும் கண்காணிக்கிறார்கள். எனவே இந்த 5 போலீஸ் நிலையங்களில் கூடுதல் போலீசாரை நியமிக்கவும், கூடுதலாக 3 போலீஸ் நிலையங்களை உருவாக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அரசுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறுகையில், சரவணம்பட்டி போலீஸ் நிலைய எல்லையில் இருந்து பிரித்து கணபதி, பீளமேட்டில் இருந்து பிரித்து காளப்பட்டி, சிங்காநல்லூரில் இருந்து பிரித்து இருகூர் ஆகிய 3 புதிய போலீஸ் நிலையங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம். அதுபோன்று கோவை அரசு மருத்துவமனை, மருதமலை ஆகிய 2 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    குறிப்பாக கோவை மாநகர காவல்துறையில் உள்ள கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம், வடவள்ளி, துடியலூர் ஆகிய 5 போலீஸ் நிலையங்களிலும் தலா 30 போலீசார்தான் உள்ளனர். அங்கு குறைந்தது தலா 60 போலீசார் இருக்க வேண்டும். எனவே கூடுதல் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று கோவில்பாளையம், மதுக்கரை, செட்டிபாளையம், நீலாம்பூர் ஆகிய காவல் நிலையங்களை கோவை மாநகரத்துடன் இணைக்கவும் முடிவு செய்து உள்ளோம் என்றார்.

    English Summary

    A proposal has been sent to the Tamil Nadu government recommending the establishment of three additional police stations within the Coimbatore City Police limits. Reports indicate that plans have been formulated to create three new police stations—Ganapathy (carved out of the Saravanampatti station limits), Kalapatti (from Peelamedu), and Irugur (from Singanallur)—and the corresponding proposal has been submitted to the government.