பொள்ளாச்சி டூ வால்பாறை.. பயமே இல்லாமல் யானை கூட்டத்தை நெருங்கிய இளைஞர்கள்.. இறுதியில் ட்விஸ்ட்

  • கோவை: யானைகள் ஆக்ரோஷமானவை.. கூட்டத்துடன் இருக்கும் போது, அமைதியாக சாலையை கடந்து செல்லும், தனியாக இருக்கும் போது ஆபத்தானதாக மாறும். ஆனால் கூட்டத்துடன் இருக்கும் போது கூட தொந்தரவு செய்தால் கோபப்பட்டு தாக்கிவிடும். அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வால்பாறை சாலை நின்றிருந்த யானைக் கூட்டத்தின் அருகே சென்ற நபரை யானை ஆவேசமாக வந்து தாக்க முயற்சி செய்துள்ளது. நல்ல வேளையாக அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்கள் வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் - வால்பாறை பகுதி என்பது ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இங்கு யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. யானைகள் தங்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயரும் இயற்கை வழித்தடங்கள் ஏராளமாக உள்ளன.

    Advertisement

    ஆழியார் அணை, அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் யானைகளை அதிகமாக பார்க்க முடியும். அதேபோல் வால்பாறையின் தேயிலைத் தோட்டங்கள் யானைகளுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் மேய்ச்சல் நிலமாக இருக்கிறது. எனவே யானைகள் அடிக்கடி அங்கு வந்துவிடுகின்றன. வால்பாறை சாலையை பொறுத்தவரை ரொட்டிக்கடை, காடம்பாறை, அட்டகட்டி போன்ற பகுதிகளில் யானைகள் யானைகள் கூட்டம் கூட்டமாகச் சாலை ஓரத்தில் மேய்வதும், அங்கிருந்து ஆழியார் அணைக்குச் சென்று நீர் அருந்துவதும் சாதாரணமான ஒன்று. இதனால் யானைகள் மற்றும் மனிதர்களிடையே மோதல் அதிகமாகவே உள்ளது. எதிர்பாராதவிதமாக தனியாக செல்லும் பெண்கள், முதியவர்கள், இளைஞர்களை யானைகள் ஆக்ரோசமாக தாக்கிவிடுகின்றன. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

    Advertisement

    இந்த நிலையில், ஆழியார் - வால்பாறை சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த யானைக் கூட்டத்தின் அருகே சென்ற நபர் ஒருவர், அவற்றை மிரட்டுவது போல் நடந்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த யானைக் கூட்டம் அவரைத் தாக்க ஓடிவர, அதைக் கண்ட மற்ற பயணிகள் அலறியடித்துக் கொண்டு அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    இதுகுறித்துச் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "இதுபோன்று வனவிலங்குகளிடம் அத்துமீறி நடப்பவர்கள் மீது வனத்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற பொறுப்பற்ற நபர்களால் மனித - வனவிலங்கு மோதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது" என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    English Summary

    What happened to the person who approached a herd of elephants standing on the Aliyar-Valparai road near Pollachi in Coimbatore district?