கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!

  • தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கோயம்புத்தூர் மீது ஐடி நிறுவனங்கள், கார்ப்ரேட் நிறுவனங்களை தாண்டி தற்பொழுது சினிமா பிரபலங்களின் கவனமும் திரும்பியுள்ளது. இதனால் செலிப்ரிட்டி மத்தியில் கோயம்புத்தூர் புதிய முதலீட்டு மையமாக மாறி வருகிறது.

    Advertisement

    சென்னையைத் தாண்டி கோவையில் தற்போது பலதரப்பட்ட உணவு மற்றும் வாழ்க்கை முறை கலாச்சாரம் (Food and Lifestyle Scene) வளர்ந்து வருவதால், பிரபலங்கள் பலரும் தங்களின் புதிய வணிக முயற்சிகளுக்குக் கோவையைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

    Advertisement

    இந்த வரிசையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணித் திரைப்பட நடிகையும் தொழிலதிபருமான ராகுல் ப்ரீத் சிங், கோவையின் மிக முக்கிய அடையாளமான ரேஸ் கோர்ஸ் (Race Course) பகுதிக்கு அருகே தனது புதிய உணவகக் கிளையைத் தொடங்கவுள்ளார்.

    கோவை ரேஸ் கோர்ஸ் பகுதி

    கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் ஏற்கனவே பல பிரீமியம் உணவகங்களும், நவீனக் கஃபேக்களும் (Cafés) இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியின் போட்டியை அதிகரிக்க தென்னிந்திய சுவைகளை மையமாகக் கொண்ட நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் புதிய உணவகம் இப்பகுதிக்கு வர உள்ளது.

    Advertisement

    'ஆரம்பம்' உணவகம்

    நடிகை ராகுல் ப்ரீத் சிங், 'ஆரம்பம்' (Arambam) என்ற புகழ்பெற்ற உணவகத்தின் இணை உரிமையாளராக இருந்து வருகிறார். சைவ உணவுகளை மட்டுமே வழங்கும் இந்த உணவகம், பாரம்பரியச் சிறுதானியங்களை (Millet-centric) முதன்மையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சத்தான, அதே நேரத்தில் மலிவு விலையில் உணவுகளை வழங்குவதே இந்த உணவகத்தின் முதன்மைக் நோக்கமாகும். இந்தியாவின் முன்னணி கிளவுட் கிச்சன் பிராண்டான 'கியூர்ஃபுட்ஸ்' (Curefoods) நிறுவனத்துடன் இணைந்து இந்த 'ஆரம்பம்' உணவக கூட்டணியை ராகுல் ப்ரீத் சிங் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

    பெங்களூரு, ஹைதராபாத்தைத் தொடர்ந்து கோவை

    இந்தியாவின் முக்கியப் பெருநகரங்களில் ஏற்கனவே தடம் பதித்துள்ள 'ஆரம்பம்' உணவகம், தற்பொழுது கோவை மாநகரிலும் கால்பதிக்கிறது. ஏற்கனவே கர்நாடக மாநிலம் பெங்களூரின் முக்கியப் பகுதிகளான ஹெச்எஸ்ஆர் லேஅவுட் (HSR Layout) மற்றும் ஹென்னூர் (Hennur) ஆகிய இடங்களிலும், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ஐடி ஹப் பகுதியான மாதப்பூரிலும் (Madhapur) இது செயல்பட்டு வருகிறது.

    Advertisement

    இதுமட்டுமன்றி, மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் தனது கிளைகளை விரிவாக்கம் செய்துள்ளார் ராகுல் ப்ரீத் சிங்,

    இந்த உணவகத்தின் மிக முக்கியச் சிறப்பம்சமே, இதன் மலிவான விலைப்பட்டியல் தான். சிறுதானியங்களால் செய்யப்பட்ட தென்னிந்தியப் பாரம்பரிய உணவுகளான மில்லெட் இட்லி, ராகி தோசை மற்றும் ஃபில்டர் காபி போன்றவற்றை விற்கிறது. இந்த உயர்தர ஆரோக்கிய உணவுகளின் ஆரம்ப விலை வெறும் 49 ரூபாய் என்ற மிகக் குறைந்த தொகையிலிருந்து தொடங்குகிறது. இந்த விலை அளவீடு கோவையில் தற்போதைய விலை அளவுகள் பொறுத்து மாறுப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

    English Summary

    South Indian actress and entrepreneur Rahul Preet Singh is expanding her popular millet-based healthy restaurant chain ‘Arambam’ to Coimbatore’s upscale Race Course locality. This launch highlights the city’s rising status as a preferred destination for celebrity businesses and lifestyle investments beyond Chennai.