Amuthan: கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை! தாய்மாமனாக விஜய் என்ன சொல்ல போகிறார்? சீமான் வேதனை

  • கோவை: கோயமுத்தூர் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தாய்மாமனாக விஜய் என்ன சொல்ல போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: போதைப் பொருட்களின் பழக்கம் குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்த கோவை மாணவர் அமுதனின் படுகொலையை 'குழு மோதல்' எனக் கூறி, மூடி மறைப்பதா?

    Advertisement

    கோவையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களாலேயே அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது. நட்பையும், நல்லொழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டிய வேண்டிய கல்விக்கூடங்களிலேயே மாணவர்களிடையே பகைமையும், வெறுப்பும், போதைப்பழக்கமும் உருவாகி, அது ஒரு உயிரைப் போக்கும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது எதிர்கால தலைமுறையினர் குறித்தான அச்சத்தை ஏற்படுத்துகிறது. தம்பி அமுதனை இழந்து, ஆற்ற முடியாதப் பெருந்துயரத்தில் சிக்குண்டு வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

    கல்லூரி வளாகத்தில் நிலவும் போதைப்பொருட்களின் புழக்கம் குறித்துக் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததாலேயே மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டதாக, அவரது பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    Advertisement

    கோவை, செட்டிப்பாளையம் காவல்நிலையத்திற்கு மாணவர் அமுதன் அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடமிருந்து போதைப்புழக்கம் குறித்தத் தகவல்களைக் காவல்துறையினர் பெற்றுள்ளனர் என்பதும், அதற்குப் பிறகே, ஏறக்குறைய 20 மாணவர்களால் அமுதன் அடித்தே கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதுமான செய்திகள் பெற்றோரின் குற்றச்சாட்டை உறுதிசெய்கின்றன.

    அப்படியிருக்கையில், போதைப் பொருட்களின் புழக்கம் எனும் முதன்மைக்காரணத்தை மூடி மறைத்து, மாணவர்களிடையேயான தகராறு என வழக்கின் கோணத்தையே மாற்ற முற்படும் தவெக அரசின் போக்கு அநீதிக்குத் துணைபோகும் துரோகம் இல்லையா? 'குழு மோதல்' எனக் கொஞ்சமும் கூச்சமில்லாது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் கூறியதெல்லாம் மோசடித்தனம் இல்லையா? 20 பேர் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொல்வதற்குப் பெயர் குழு மோதலா? அலைபேசி பறித்ததால் வந்த சண்டை, குழுமோதல் என்றால் மட்டும் இப்படுகொலை நியாயமாகிவிடுமா? இல்லை இது படுகொலையே இல்லை என்றாகிவிடுமா?

    Advertisement

    அரசு தன் மீது குற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இன்னொரு கொடுங்குற்றத்தை மூடி மறைக்கலாமா? பறிபோன மாணவனின் உயிரைவிட உங்கள் ஆட்சியின் மீதான நற்பெயர்தான் முதன்மையானதா? பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனையே இல்லை என்கிறதா அரசு? அண்மையில் ஒரு பள்ளியில் கஞ்சாபோதையில் சக மாணவனை தாக்கும் காணொளியை ஆட்சியாளர்கள் பார்க்கவில்லையா?

    பரப்புரைக் கூட்டங்களில் தன்னை, 'தாய் மாமன்' எனக் கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய், படுகொலை செய்யப்பட்டு இறந்துபோன 19 வயது பிள்ளையின் மரணத்துக்கு தாய் மாமனாக என்ன சொல்லப் போகிறார்? என்ன நீதியைப் பெற்றுத் தரப் போகிறார்? தனது மகனை இழந்தப் பரிதவிப்பில் பெருங்குரலெடுத்து ஓலமிடும் பெற்றோருக்கு என்ன சொல்ல விளைகிறார்? நடந்தவைகளை மூடி மறைத்து, பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் வேலையைச் செய்கிறது கல்லூரி நிர்வாகம். போதைப்பொருட்களின் பயன்பாட்டுக்கும், இக்கொலை வழக்குக்கும் தொடர்பில்லை என உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு. இதுவெல்லாம் வெளிப்படையாகக் செய்யப்படும் சனநாயகத்துரோகம் இல்லையா? வெட்கக்கேடு! பேரவலம்!

    Advertisement

    ஆகவே, தம்பி அமுதனின் படுகொலையில் நீதிவிசாரணை செய்யப்பட்டு, தொடர்புடைய கொலையாளிகள் யாவரும் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    English Summary

    Naam Tamilar Seeman condemns Coimbatore Youth Amuthan murder and he demanded strict action against the murderers.