பத்திரிகையாளர்களை மிரட்டினாரா செங்கோட்டையன்.. முற்றிய வாக்குவாதம்.. ப்ரஸ்மீட்டில் பரபரப்பு

  • கோவை: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட அறிவிக்கப்படாத சர்ச்சைகள் தான் ஏராளமான உள்ளன. முதலமைச்சர் விஜயும், அமைச்சர்களும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் மோகத்துடன் வலம் வருவது, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவது நடந்து வருகிறது. அந்த வரிசையில் மூத்த அமைச்சர் செங்கோட்டையனும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சட்டம் ஒழுங்கு பாதிப்பு குறித்த கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் பேசியதால், செய்தியாளர்கள் கோபமடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    கோவை விமானநிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தென்மேற்கு பருவமழை தொடர்பாக தமிழக முதலமைச்சர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இன்று காலையில்கூட அதற்கான ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. தென்மேற்கு பருவமழையில் நமக்கு பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேநேரத்தில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சர்ச்சையில் செங்கோட்டையன்

    ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுரைகள் தந்துள்ளார். தென்மேற்கு பருவமழை குறித்து மக்கள் அச்சமும் கொள்ளத் தேவையில்லை. நீலகிரி நிலச்சரிவுக்கான காரணம் என்ன என்பது குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆட்சிக் காலத்தில் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றும் வகையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று, பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன.

    தவறுகள் நடப்பதை சுட்டிக்காட்டினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமையும். சட்டம் ஒழுங்கு பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறீர்கள். இந்த அரசு அமைந்து இன்னும் சில நாட்களே ஆகின்றன. ஒரு புதிய அரசு நிர்வாகம் தன்னிச்சையாகச் செயல்பட சில மாதங்களாவது அவகாசம் கொடுக்க வேண்டும். அதற்குள்ளாகவே கேள்வி கேட்பது வேடிக்கையாக இருக்கிறது என்பதுடன் உங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சனையா நன்றாக தானே இருக்கிறார்கள் என்றார்.

    Advertisement

    மிரட்டும் தொனியில் பதிலா

    அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம், பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் பதில் கொடுக்கிறீர்களா என்று கேட்டனர். அதற்கு செங்கோட்டையன், நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. அரசு பொறுப்பேற்ற இந்தச் சிறிய காலத்திற்குள்ளேயே கடுமையான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். குறிப்பாகச் சூலூர் சம்பவத்தில் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நான் மென்மையான சுபாவம் கொண்டவன் என்று எதிர்க்கட்சியினர் கூட பாராட்டியிருக்கிறார்கள்.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முதலமைச்சர் அனைத்துப் பணிகளையும் படிப்படியாகச் செய்து வருகிறார். அதற்குரிய கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்பது சுலபம், ஆனால் நிர்வாகத்தில் இருக்கும் எங்களைப் போன்றவர்களின் சிரமங்களை உணர வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்குவது அவருடைய ஜனநாயக உரிமை. அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    Advertisement

    சிறந்த அமைச்சரவை

    சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க அரசு தீவிரமாகப் போராடி வருகிறது. காடுகளுக்குள் வீடு கட்டித் தங்குபவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது எப்படி. ஒவ்வொன்றாகத்தான் செய்ய முடியும். குற்றச்சாட்டுகள் வரும்போது அதை நிவர்த்தி செய்யும் பணிகளை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதேபோல், காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதைத் தடுத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்திக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு சிறந்த கூட்டணிக் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். திமுக எடுக்கும் முடிவுகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. நல்ல காரியங்களைச் செய்யும் பத்திரிகையாளர்களை ஊக்கப்படுத்துவதும், அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும் அவசியமாகும். அதனைச் செய்வதே இந்த அரசின் தலையாய கடமையாகும்" என்றார்.

    English Summary

    Sengottaiyan: Minister Sengottaiyan gave threat in press meet. Reporters involved word war with him made controversy.