அப்பவே அப்படியா.. எடப்பாடியின் உண்மை முகம்.. செங்கோட்டையன் பகீர் குற்றச்சாட்டு

  • கோவை: தமிழக அரசியலில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக, அதிமுக கூட்டணி அமைத்து தடுக்க சதித்திட்டம் தீட்டியதாக புகார் கூறப்பட்டது. அதிமுகவின் பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். இதற்கு தவெக மீது திமுக, அதிமுக குற்றம் சாட்டி வருகின்றன. எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்திருந்தார் என்று செங்கோட்டையன் பகீர் தகவலை சொல்லியுள்ளார்.

    Advertisement

    கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் நாள்தோறும் துறைவாரியாக விரிவான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் வரையறுக்கப்பட வேண்டும். பெண்கள், பொதுப்பிரிவினர் மற்றும் பட்டியலின இடஒதுக்கீடு மக்கள் தொகைக்கு ஏற்ப சீரமைக்கப்பட வேண்டும். பட்ஜெட் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இதுகுறித்த ஆழமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.

    Advertisement

    உரம் பதுக்கல் கடுமையான நடவடிக்கை

    உள்ளாட்சித் துறை அமைச்சர் இந்தப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். அரசின் நற்பெயருக்குக் களங்கம் வராத வகையிலும், கொள்கை முடிவுகளில் எவ்வித சமரசமும் இல்லாத வகையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கச் சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், மக்கள் போராட்டங்களாலும் கனிமப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது மாற்றிவிடப்பட்டுள்ளது.

    தென்காசி வழியாகச் செல்ல அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, கேரளாவிற்குத் தற்காலிகமாக கனிமப் பொருட்களைக் கொண்டு செல்லக் கூடாது என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் உரத்தை பதுக்கியவர்கள் பிடிபட்டுள்ளனர். இதுபோன்று செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, உரம் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது அரசு கடுமையான மற்றும் பாரபட்சமற்ற நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருகிறது.

    Advertisement

    அன்புமணி பேசியது தப்பு

    மேகதாது அணை கட்டப்பட்டால் ஒரு லட்சம் வீரப்பன்கள் உருவாகுவார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ஒரு மாநிலத்திற்கு எதிராக இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் கருத்துகளைத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. எந்தவொரு பிரச்சனையையும் நாம் சட்ட ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும். இரு மாநிலங்களிலும் இரு தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தாலும் ஒரு பொருளைக் கூடச் சேதப்படுத்தவில்லை.

    ஆனால், வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. நாம் அமைதியான முறையில்தான் நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில், உபரி நீர் வரும்போது மட்டுமே கர்நாடகா தண்ணீர் திறக்கிறதே தவிர, காவேரி நதிநீர் ஆணையம் நிர்ணயித்த தண்ணீரை நமக்கு உரிய காலத்தில் வழங்குவதில்லை. இது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது கண்டனத்திற்குரியது. கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் தொழிற்சாலை மற்றும் கழிவுநீரால் கெலவரப்பள்ளி அணை முழுமையாக மாசடைந்துள்ளது.

    Advertisement

    திமுகவுடன் எடப்பாடி கூட்டணி

    இதனால் மீன்கள் உயிரிழந்து, விவசாயத்திற்கு நீரைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகார்கள் வந்தவுடன், மீன்வளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதனைத் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி நல்லாட்சி தருவார். அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் அவர் பின்னால் அணிவகுக்கிறார்கள்.

    அதிமுகவை பொறுத்தவரை, அதன் கொள்கைகளில் ஏற்பட்ட சறுக்கல்களே அக்கட்சியினர் வெளியேறக் காரணமாகும். எடப்பாடி பழனிசாமி தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்தவர். எதிர்க்கட்சியாக இருந்தபோதே திமுகவுடன் அவர் ரகசியக் கூட்டணி வைத்திருந்தார் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அம்மாவைச் சிறையில் அடைத்த இயக்கத்துடன் கைகோர்க்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியால் அந்த இயக்கத்தைக் காப்பாற்ற முடியாது.

    Advertisement

    தவெகவுக்கு எதிராக சதித்திட்டம்

    இதன் காரணமாகவே, அங்கிருந்து பலரும் வெளியேறி வருகிறார்கள். தவெக ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு எடப்பாடி சதித்திட்டம் தீட்டினார். 47 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு அவர் எப்படி முதலமைச்சர் ஆவார். திமுகவினர் எம்ஜிஆருக்கும் இடர்பாடுகளை கொடுத்தவர்கள். அம்மாவை ஜெயிலுக்கு அனுப்பியவர்கள். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது திமுகவுடன் கூட்டணி வைத்தவர் என்பதை நாங்கள் அறிவோம்" என்றார்.

    English Summary

    Minister Sengottaiyan said, ADMK Edappadi Palanisamy was secrete deal with DMK when opposition leader.