தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு!

  • கோவை: தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர் ஒருவர் முதல்வருக்கு செவித்திறன் கருவி அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    Advertisement

    தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. குற்றச்சம்பவங்களுக்கு எதிராக அரசு இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல தரப்பிலிருந்தும் எழுந்து வருகின்றன.

    Advertisement

    இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செவித்திறன் கருவி அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி, கோவை தலைமை தபால் நிலையத்தில் இருந்து முதல்வர் விஜய்யின் பனையூர் அலுவலக முகவரிக்கு செவித்திறன் கருவி ஒன்றை பார்சல் மூலம் அனுப்பி வைத்தார். இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெரியார் மணி, தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவற்றைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    Advertisement

    மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் நேரடியாக பதிலளிப்பதில்லை என்றும், அரசின் நிலைப்பாடு தெளிவாக வெளிப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

    தமிழக மக்களின் குரலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் வேதனைகளும் அரசின் கவனத்திற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே செவித்திறன் கருவியை அனுப்பியதாக தெரிவித்த அவர், இதன் மூலம் அரசு விழிப்புணர்வுடன் செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என கூறினார். இந்த நூதன போராட்டம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    English Summary

    A social activist from Coimbatore sent a hearing aid to Chief Minister Vijay as a symbolic protest, urging the government to take stronger action against crimes involving women and children. The unique protest has drawn attention and sparked discussions on law and order issues in Tamil Nadu.