எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க முடியாது.. எஸ்பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி! தகிக்கும் அதிமுக

  • சென்னை: அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்க முடியாது.. தன்னை நம்பி வந்த 9 மாவட்ட செயலாளர்களை அப்படியே விட்டுவிட முடியாது என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்பி வேலுமணி பேசிய வீடியோ தற்போது வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சி விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கரை அடுத்து எஸ்பி வேலுமணியும் ராஜினாமா செய்யப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    கோவையில் நடைபெற்ற தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், எஸ்பி வேலுமணி ஆவேசமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி வழங்கிய பதவியை ஏற்க மாட்டேன் என்று எஸ்பி வேலுமணி பேசியுள்ளார். எஸ்பி வேலுமணி கூறியிருப்பதாவது:-

    Advertisement

    பதவியை ஏற்க நான் தயாராக இல்லை

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கப்போவது இல்லை. என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு பதவியை ஏற்க நான் தயாராக இல்லை. என்னுடன் 9 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாருக்கும் பதவி கொடுக்கவில்லை. எனக்கு மட்டும் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

    என்னை நம்பி பின்னால் நிற்பவர்கள் எல்லாரும் கஷ்டப்பட்டவர்கள்.. வீரமணி, விஜயபாஸ்கர், சிவி சண்முகம், தங்கமணி அந்த மாவட்டத்தினுடைய ஜாம்பவான்கள்.. செலவு பண்ணி கட்சியை வளர்த்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்கவில்லை. என்னை நம்பி வந்தவர்களுக்கு பதவியை கொடுங்கள்" என்று எஸ்பி வேலுமணி ஆவேசமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

    Advertisement

    அதிமுகவில் பிளவு

    தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுக தோல்வியால் அக்கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் விஜய் அரசுக்கு ஆதரவு அளித்தனர். பின்னர் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொண்டதால் மீண்டும் எடப்பாடியுடன் சமரசமாக சென்றனர். இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கட்சி பதவியை வழங்காததால் அதிருப்தி நிலவியது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பாக எஸ்பி வேலுமணிக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தலைமை நிலைய செயலாளராக இருந்த எஸ்பி வேலுமணிக்கு அந்த பொறுப்பை மாற்றிவிட்டு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. எஸ்பி வேலுமணியின் பின்னால் கை கோர்த்தவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்படாததும் வேலுமணிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் எஸ்பி வேலுமணி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

    Advertisement

    அதிமுகவில் இருந்து வெளியேறுகிறாரா?

    இந்த சூழலில்தான், கோவையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தனது ஆதங்கத்தை எஸ்பி வேலுமணி கொட்டி தீர்த்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர். இதில் 4 பேர் தவெகவில் இணைந்துள்ள நிலையில், சிவிஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் வரும் வியாழக்கிழமை தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைய இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த சூழலில் எஸ்பி வேலுமணியின் இந்த ஆவேச பேச்சும், அவரும் அதிமுகவில் இருந்து வெளியேற தயாராகி வருகிறாரா? என்ற கேள்வியை அதிமுகவினரிடம் எழுப்பியுள்ளது.

    English Summary

    SP Velumani said he would not accept the party's AIADMK Deputy General Secretary post, stressing that those who stood by him deserved recognition instead. A video of his speech at a Coimbatore meeting held two days ago has now surfaced, triggering political discussion.