கோவை: கோவையில் இந்த வருடம் மழை சரியாக பெய்யாததால் விவசாயிகள் கவலையில் இருக்கிறார்கள்.... அதனால்தான், வடகிழக்கு பருவமழையாவது நல்லபடியாக பெய்து, ஊரில் விவசாயம் செழிக்க வேண்டும் என்று கிராம மக்கள் ஒரு வித்தியாசமான வேண்டுதலை நடத்தி இருக்கிறார்கள். அதுவும் ஆண், பெண் தவளைகளுக்கு ஊரே சேர்ந்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.. இந்த திருமணம் எப்படி நடந்தது தெரியுமா?
கோவை மாவட்டம் வேடபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தாண்டு எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால், வடகிழக்கு பருவமழையில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு செய்தனர்.. அதுக்காக ஆண் தவளை, பெண் தவளை என 2 தவளைகளை பிடித்து வைத்திருந்தனர்.
நேற்று மாலை குரும்பபாளையம் ஊர்கவுண்டர் வீட்டில் இருந்து திருமண ஏற்பாடுகள் தொடங்கின. ஆண் தவளைக்கு தங்க செயின் அணிவித்தார்கள்.. பெண் தவளைக்கு தங்க நெக்லஸ் அணிவித்து, மல்லிகை பூ, ரோஜா பூக்களாலும் அலங்காரம் செய்தார்கள்.. அதன்பிறகு 2 தவளைகளையும் தெர்மாக்கோல் மற்றும் தட்டு குச்சிகளை வைத்து தயாரிக்கப்பட்ட சிறிய மாட்டு வண்டியில் உட்கார வைத்தனர். தவில், நாதஸ்வரம் முழங்க, மாப்பிள்ளை அழைப்பும் நடத்தப்பட்டது.. பிறகு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து தவளைகளை விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது ஆண்-பெண் தவளைகள் தனித்தனியாக வைக்கப்பட்டு பொதுமக்கள் குடை பிடித்து வர பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. திருமணத்துக்கு தேவையான அனைத்து சீர்வரிசை பொருட்களும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது... மங்கள வாத்தியங்கள் முழங்க, திருமண சடங்குகளும் ஆரம்பமானது. ஆண் தவளையை கையில் வைத்திருந்தவர், பெண் தவளைக்கு தாலி கட்டினார்... இப்படி 2 தவளைகளுக்கும் ஊரே சேர்ந்து திருமணம் செய்து வைத்தது.. திருமணம் முடிந்ததும் தவளைகளை அப்படியே விட்டுவிடவில்லை.. மறுபடியும் அவற்றை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள்.. தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து, 2 தவளைகளையும் கிணற்றில் விட்டனர். நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும்.. ஊரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்றும் வேண்டிக் கொண்டனர். உண்மையில், இந்த வழக்கம் இப்போது புதிதாக வந்தது கிடையாது. முன்னோர்கள் காலத்திலிருந்தே மழை வேண்டி இதுபோன்ற வழிபாடுகள் நடத்தப்பட்டு வருவதாக கிராம மக்கள் சொல்கின்றனர். அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாகத்தான் இப்போதும் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அதெப்படி விருந்து இல்லாமல் கல்யாணம்? கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மக்கள் அரிசி கொடுத்துள்ளனர். அந்த அரிசியை வைத்து சாப்பாடு தயார் செய்யப்பட்டது.. தொடர்ந்து கிடாய் வெட்டி, இரவில் கிராம மக்கள் அனைவருக்கும் திருமண விருந்தும் நடத்தப்பட்டது. தவளைகள் திருமண விழாவின்போது ஊர் மக்கள் சார்பில் மதுரை வீரன் சுவாமிக்கு இந்த கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.. பிறகு அன்னதானமும் நடந்தது. மழைக்காக பல விதமான வழிபாடுகள், வேண்டுதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், குரும்பபாளையம் மக்கள் தங்கள் ஊரில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.. இப்போது அனைவருடைய எதிர்பார்ப்பும் ஒன்றுதான்.. வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா?கோவை கல்யாணம்
கோடியில் குளித்த கோவை தொழிலதிபர்.. மறுமணம் செய்ய ஆசைப்பட்ட பெண்.. கனவிலும் இப்படி நடக்க கூடாது
தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம்
தங்கத் தாலி, சீர்வரிசை
'வெற்றிப் பயணம்' திட்டம் குறித்த குழப்பம்.. கோவை அரசு பேருந்து நடத்துநர் தந்த விளக்கம்!
கமகம கிடாவிருந்து