தோல்வி தந்த அதிர்ச்சி.. கோவையில் கூடிய பாஜக ‘டாப்’ கமாண்டர்ஸ்.. வானதி கொடுத்த ‘மெலடி’ சாக்லேட்!

  • கோவை: தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையை விரிவாக்கம் செய்து அதிரடி காட்டி வரும் அதே நேரத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலின் படுதோல்வியால் நிலைகுலைந்து போயிருக்கும் தமிழக பாஜக, தங்களைச் சீரமைக்கும் அக்னிப் பரீட்சையில் இறங்கியுள்ளது.

    Advertisement

    சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் 80 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

    Advertisement

    பாஜக தலைவர்கள் அசெம்பிள்

    கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாநில அணி தலைவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. பா.ஜ.க தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்க்ற்றனர்.

    மேலும், மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, கரு.நாகராஜ், மாநில செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி, அனைத்து பிரிவு அமைப்பாளர் கே.டி.ராகவன், மாநில பொதுபொது செயலாளர், ராம. சீனிவாசன், சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் வேலூர் இப்ராகிம், நடிகை கஸ்தூரி, செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், உதகை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன், முன்னாள் எம்.எல்.ஏ காந்தி உட்பட 80 க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    Advertisement

    தோல்வி குறித்து அலசல்

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்தும், தோல்விக்கான காரணங்கள் குறித்தும் தமிழகத்​தில் அடுத்​த​தாக வரவிருக்கும் உள்​ளாட்​சித் தேர்​தல் உள்​ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த புதிய அமைப்பு மாற்றங்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிகளவில் இணைக்கும் திட்டங்கள், கட்சியின் கீழ்மட்ட செயல்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பி.எல்.சந்தோஷ்

    தேர்தலில் படுதோல்வி அடைந்த 26 வேட்பாளர்களையும் நேருக்கு நேர் உட்கார வைத்து பி.எல்.சந்தோஷ் நடத்திய விசாரணை, கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாக்குகள் எங்கே சிதறின? தவெக மற்றும் திமுகவின் வியூகங்களை ஏன் முறியடிக்க முடியவில்லை? உளவுத்துறை ரிப்போர்ட்டுகள் ஏன் தவறாகின போயின? என வேட்பாளர்களிடம் தனித்தனியாகக் கேட்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மெலடி சாக்லேட் கொடுத்த வானதி

    பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு மெலடி சாக்லேட் பரிசாக கொடுத்திருத்த நிலையில், கோவையில் மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பா.ஜ.க தொண்டர்களுக்கு மெலடி சாக்லேட்டை பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    உள்ளே தேர்தல் தோல்விக்கான காரணத்தை கசப்பும் இனிப்புமாய் மென்று கொண்டிருந்த தலைவர்களுக்கு மத்தியில், வெளியே வானதி சீனிவாசன் சாக்லேட் கொடுத்து தொண்டர்களை குஷிப்படுத்தியதுதான் பாஜக கூட்டத்தின் சுவாரசியமான முரண்.

    English Summary

    Reeling from a crushing defeat in the 2026 Assembly elections, Tamil Nadu BJP has embarked on a trial by fire to restructure itself. A consultative meeting was held at the Coimbatore district BJP office—presided over by National General Secretary (Organization) BL Santhosh—to deliberate on the Assembly election debacle. Eighty key functionaries participated in this meeting.