கோவை: ஜப்பானில் இருந்து கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணியான தகமாசா ஒசாவாவின் வாழ்க்கையை கோவை பிரியாணி மாற்றி உள்ளது. தகமாசா ஒசாவா கோவையில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்று சாப்பிட்ட ஒரு தட்டு பிரியாணி அவரது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அந்த பிரியாணியால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானிய ஷெஃப் ஆக மாறிய அவர், அந்நாட்டில் 'மிச்செலின்' என்ற படத்தை வென்றுள்ளார்.
வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் சாப்பிடும் ஒரு வேளை சாப்பாடு தலையெழுத்தையே மாற்றும்.. அப்படித்தான் தகமாசா ஒசாவாவின் வாழ்க்கை பயணம் மாறி உள்ளது.2009-ஆம் ஆண்டில் ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா பயணியாக வந்துள்ளார். அப்படி வந்தவர் தமிழ்நாடு வழியாக பயணித்த போது, தகமாசா ஒசாவா கோவையில் உள்ள ஒரு உணவகத்திற்குள் நுழைந்து, தான் அதுவரை அதிகம் அறிந்திருந்திராத ஒரு உணவை ஆர்டர் செய்தார். அதன் முதல் வாயே அவருக்கு மேலும் சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மற்றொரு பிரியாணியை ஆர்டர் செய்தார். பின்னர் மற்றொரு உணவகத்திற்குச் சென்று மீண்டும் ஆர்டர் செய்தார். அன்றைய நாளின் முடிவில், அவர் குறைந்தது நான்கு பிரியாணிகளைச் சாப்பிட்டுள்ளார். தகமாசா ஒசாவாவுக்கு கோவையில் இருந்த அந்த உணவகத்தின் பெயர் நினைவில் இல்லை. ஆனால் அவருக்குப் பிரியாணி நன்றாக நினைவுக்கு வந்துள்ளது. கோவையில் சாப்பிட்ட அந்த பிரியாணி அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்தது.
இன்று சரியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு, டோக்கியோவின் கான்டா மாவட்டத்தில் பத்து இருக்கைகள் மட்டுமே கொண்ட 'பிரியாணி ஒசாவா' என்ற உணவகத்தில் ஷெஃப் இருக்கிறார் ஒசாவா. பிரியாணி என்ற ஒரே ஒரு உணவை வழங்கியதற்காக, இவரது உணவகம் 2026-ஆம் ஆண்டில் மிச்செலின் பிப் கர்மாண்ட் விருதை ஜப்பானில் வென்றுள்ளது. அரிசி மற்றும் கறி சேர்ந்த இந்த பிரியாணி உணவின் மீது தனக்கிருக்கும் சமரசமில்லாத அர்ப்பணிப்பால் பெயர் பெற்ற ஒசாவாவின் தாரக மந்திரம் "பிரியாணி இல்லாட்டி சாவு" என்பது தான். பிரியாணி தான் உலகம் என்பதாக இருக்கிறார். இந்த வாரம், 36 வயதான இந்த ஷெஃப், தனது புகழ்பெற்ற பிரியாணியை மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் நிகழ்வுக்காக மீண்டும் இந்தியாவிற்கு எடுத்து வந்து, காளான், கோழி மற்றும் ஆட்டுக்கறி ஆகிய மூன்று வகை பிரியாணிகளை பரிமாறி உள்ளார். அன்று ஒரு சுற்றுலாப் பயணியாகக் கோவையில் பிரியாணியைக் கண்டுபிடித்த பிறகு, அவர் தெற்கு ஆசியா முழுவதும் பல ஆண்டுகள் பயணம் செய்து, ஹைதராபாத், சென்னை, கொச்சி, லக்னோ, கொல்கத்தா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் சமையலறைகளில் இருந்து பிரியாணி செய்ய கற்றுக்கொண்டார். ஒசாவா இது பற்றி கூறுகையில், "தெற்கு ஆசியா முழுவதிலும் இருந்து நான் பிரியாணி செய்யக் கற்றுக்கொண்டேன். அதனால், நான் கற்றுக்கொண்டவற்றில் சிறந்தவற்றை ஒன்றிணைத்து எனது சொந்த ரெசிபியை ஜப்பானி்் உருவாக்கினேன்" என்றார். அவரது ரெசிபியின் அடித்தளம் ஹைதராபாத் பிரியாணி ஆகும். அதில் கொல்கத்தா பாணி மசாலாக்கள், பாகிஸ்தான் பாணி கிரேவி மற்றும் பலோசிஸ்தானிய கறி பக்குவப்படுத்தும் நுட்பங்களால் செறிவூட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும், அவர் சந்தித்த அனைத்து பிராந்திய பாணிகளிலும், தமிழ்நாட்டின் பாணிதான் அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறதாம். அங்குள்ள ஒவ்வொரு அரிசி தானியமும் சுவையையும் சுமந்து நிற்கிறது என்றார். அவரது இந்த அர்ப்பணிப்பு, உலகின் மிகப்புகழ்பெற்ற பிரியாணி நிபுணர்களைக் கொண்ட பாரம்பரியத்தில் அவருக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் ஒசாவாவைப் பொறுத்தவரை, இந்தப் பயணம் இன்னமும் கோவையின் ஒரு மறக்கப்பட்ட உணவகத்தில் இருந்தும், அவர் ஆசையாக ஆர்டர் செய்த அந்த ஒரு உணவில் இருந்தும் தான் தொடங்கி இருக்கிறது என்பது ஆச்சரியமான உண்மை.